"மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தை, சூரிய உதயத்திற்கு முன்னும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் என ஒரு நாளைக்கு மூன்று வேளை 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
காயத்ரி மந்திரத்தை பொருள் அறிந்து, மிகவும் நிதானமாக, சுத்தமான இடத்தில் அமர்ந்து தியானிக்க வேண்டும். காயத்ரி மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு அதை உச்சரிக்க துவங்கிய நிமிடத்தில் இருந்து பலன்கள் கிடைக்க தொடங்கும்.
காயத்ரி ஜபம் :
இன்று மிக புனிதமான காயத்ரி ஜப நாளாகும். காயத்ரி ஜப திருநாள் ஸ்ரவண மாதத்தில் பெளர்ணமிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் மிக முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படும் காயத்ரி ஜபம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 20, 2024 தேதி வந்துள்ளது.
காயத்ரி ஜப பாராயணத்தை காயத்ரி ஜப சங்கல்பம் என்றும் சொல்வதுண்டு. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றிக் கொள்ளும் பிராமணர்கள் மறுநாள் காயத்ரி ஜபம் அன்று கூட்டாக சேர்ந்து காயத்ரி ஜபம் செய்வார்கள். 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் காயத்ரி ஜபம் பாராயணம் செய்யப்படும். ஆவணி அவிட்டம், உபகர்மாவை தொடர்ந்து காயத்ரி ஜபம் செய்வது மிக முக்கியமான சடங்காகும்.
காயத்ரி மந்திர பலன்கள் :
காயத்ரி மந்திரம் என்பது சூரிய பகவானுக்கும், காயத்ரி மாதாவிற்கும் உரிய மந்திரமாகும். காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வருபவர்களுக்கு அனைத்து பாவங்கள், துன்பங்கள், தடைகள் ஆகியவற்றில் இருந்த விடுபடுவார்கள்.
மந்திரங்களின் தாய் மந்திரமாகவும், மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகவும் கருதப்படுவது காயத்ரி மந்திரம். காயத்ரி ஜபத்தன்று கோவிலுக்கு சென்ற வழிபடுவது, புனித நீராடுவது, காயத்ரி மந்திரம் ஜபிப்பது ஆகியன அளவில்லாத புண்ணிய பலன்களை பெற்றுத் தரும்.
காயத்ரி மந்திரம் பற்றிய அரிய தகவல் :
காயத்ரி தேவியை வேத மாதா என்றும், இவரே வேதங்கள் அனைத்தையும் தோற்றுவித்தவர் என்றும் புராணங்கள் போற்றுகின்றன. காயத்ரி மாதா பிரம்மாவின் துணைவி ஆவார்.
காலையில் காயத்ரியாகவும், பகலில் சாவித்ரியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் இந்த மந்திரம் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபித்த பிறகே மற்ற மந்திரங்கள் ஜபிக்க வேண்டும். மந்திர வழிபாட்டில் முதல் இடம் காயத்ரி மந்திரத்திற்கு தான்.
காயத்ரி மந்திர விளக்கம் - மாதாவே எங்கள் மனங்கள் இருளால் நிரம்பி உள்ளது. அந்த இருளை எங்களிடம் இருந்து அகற்றுங்கள். எங்களுக்குள் இருந்து ஞான ஒளியை சுடர் விட செய்ய வேண்டும்.
ரிக் வேதத்தில் முதலில் குறிப்பிடப்படும் மந்திரம் காயத்ரி மந்திரம் தான். இந்த மந்திரம் சமஸ்கிருத மொழியில் கிட்டதட்ட 2500 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தின் அறியவில் நன்மைகள் :
காயத்ரி மந்திரம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை சுத்தம் செய்கிறது. மனத்தெளிவையும், மன அமைதியையும் தருகிறது.
தன்னையும், வெளி உலகையும் உணரும் ஞானத்தை தருகிறது.
உண்மையான பக்தி மற்றும் அர்ப்பணிப்புடன் ஜபிப்பவர்களின் மனதை காயத்ரி மந்திரம் தூய்மை ஆக்குகிறது.
மிக புனிதமான மந்திரமாக கருதப்படும் காயத்ரி மந்திரம், அனைத்து பிரச்சனைகளிலும் இருந்தும் விடுபட உதவுகிறது.
காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் போது மனம் அமைதி அடையும். இதை உச்சரிக்கும் போது உதடுகள், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களின் சுரப்பை தூண்டுகிறது.
நோய்களை குணமாக்கும் காயத்ரி மந்திரம் :
கற்றல் திறன், மனம் ஒருநிலைப்படுதல் ஆகிய ஆற்றல்களை காயத்ரி மந்திரம் அதிகரிக்க செய்கிறது.
இது உடலில் உள்ள சக்கரங்களை சீராக இயங்க வைக்கிறது. மனம் ஒருமுகப்படுவதை அதிகரிக்கிறது.
கவலை, மனஅழுத்தம் ஆகியவற்றை போக்குகிறது. இன்றைய நவீன உலகிற்கு இது மிக அவசியமான ஒன்றாகும்.
உடலில் உள்ள செல்களை தூண்டி, மனத்தை தெளிவாக செயல்பட வைக்கிறது. எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்கிறது.
காயத்ரி மந்திரம் ஜபிப்பதற்கு முன் பிரணாயாமம் செய்ய வேண்டும் என சொல்வார்கள். இது சுவாசத்தை கட்டுப்படுத்தி, நுரையீரலில் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. மூச்சை நன்கு உள்ளிழுத்து, வெளிவிடுவதால் சுவாச பிரச்சனைகள் குணமடைகிறது.
காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இது எதிர்மறை ஆற்றல்களை நீக்குகிறது. ஆராவை சுத்தப்படுத்தி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்கிறது.
நன்றி,
எழுத்தாளர் பிரியா.