காயத்ரி ஜபம் - விளக்கம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காயத்ரி ஜபம் பற்றிய பதிவுகள் :

காயத்ரி ஜபம் என்றால் காயத்ரி மந்திரத்தை இயந்திரத்தனமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் “சொல்வது” என்றே பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். அப்படிச் செய்வதும் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியது, உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவது என்றாலும், ஜபம் என்ற உளப் பயிற்சியில் அது ஆரம்பகட்ட நிலை மட்டுமே. 

வருடக்கணக்காக இந்தப் பயிற்சியை இப்படியே செய்து கொண்டிருப்பது மந்தமான மாணவருக்கு அடையாளம். அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் விழைவும் முயற்சியும் கொண்டிருப்பதே சிரத்தையான மாணவருக்கு அடையாளம்.

ஸ்ரீராம, கிருஷ்ண, சிவ நாமங்கள் உள்ளிட்ட தெய்வீக மந்திரங்களை வாய்விட்டுப் பாடுவது கீர்த்தனம் எனப்படும். அதற்கு மாறாக, ஜபம் என்பது கண்களை மூடி அகத்தைக் குவித்து செய்யப் படுவது. 

ஜபத்திற்கு முன்பாக பிராணாயாமம் செய்யவேண்டும் என்ற விதி உள்ளதன் காரணம், பிராணன் என்ற நூலேணியைப் பற்றியே அகத்தின் அடுக்குகளுக்குச் செல்ல முடியும் என்பதால் தான். 

மந்திரத்தை உதடுகளால் உச்சரிப்பது வைகரீ ஜபம். உரத்த உச்சரிப்பு சூழலில் லௌகிக ஓசைகள் மிக அதிகமாக இருந்தால் அவற்றை அடக்க உதவுகிறது. பின்பு, ரகசியம் பேசுவது போன்ற மெல்லோசையுடனோ அல்லது ஓசையின்றியோ உதடுகள் லேசாக அசையும் வகையில் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

‘ஜப’ என்ற சொல்லின் நேர்ப்பொருள் whispering, muttering என்பது. உபாம்ஶு ஜபம் எனவும் இதைக் கூறுவார்கள். அடுத்ததாக, எந்த உதட்டசைவும் இன்றி மனதிலேயே மந்திரத்தை மீண்டும் மீண்டும் இசைப்பது மானஸிக ஜபம் எனப்படும். இதுவே உத்தமமானது என்று கருதப்படுகிறது. 

மனதில் லயம் தவறுவதாகத் தோன்றினால், அதை மீண்டும் மீட்டிக் கொள்வதற்காக மந்திரத்தை மெதுவாகவோ அல்லது வாய்விட்டோ கூறிக்கொண்டு பிறகு மானஸிக ஜபத்திற்குத் திரும்பலாம் என்று சுவாமி சிவானந்தர் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

மந்திரத்தை உச்சரிப்பதல்ல, அதன் பொருளை தியானிப்பதே ஜபம் என்று பதஞ்சலி யோக சூத்திரம் கூறுகிறது. இதன்மூலம் ஜபம் தன்னளவில் சிறந்த ஆன்மீகப் பயிற்சி என்பதோடு, அதனினும் நுட்பமான தியானம் என்ற உளப்பயிற்சியில் ஆழ்வதற்கான ஒரு படிநிலை என்று கருதவும் இடமிருக்கிறது.

பாரம்பரியமாக காயத்ரி ஜபம் செய்யும் முறையில், ஜபத்தைத் தொடங்கும் முன்பு மந்திரத்தின் உருவமாக காயத்ரி தேவியின் சகுண தியானம் சுலோக வடிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

मुक्ता-विद्रुम-हेम-नील-धवलच्छायै-र्मुखैस्त्रीक्षणै-
र्युक्तामिन्दुकला-निबद्धमुकुटां तत्त्वार्थ-वर्णात्मिकाम्‌ ।
गायत्रीं वरदाऽभयांकुश-कशाः शुभ्रं कपालं गदां
शंखं-चक्र-मथारविन्दयुगलं हस्तै-र्वहन्तीं भजे ॥

முக்தா-வித்³ரும-ஹேம-நீல-த⁴வலச்
சா²யைர்-முகை²ஸ்த்ரீக்ஷணைர்-
யுக்தாமிந்து³கலா-நிப³த்³த⁴முகுடாம்ʼ
தத்த்வார்த²-வர்ணாத்மிகாம்‌ |
கா³யத்ரீம்ʼ வரதா³(அ)ப⁴யாங்குஶ-கஶா:
ஶுப்⁴ரம்ʼ கபாலம்ʼ க³தா³ம்ʼ
ஶங்க²ம்ʼ-சக்ர-மதா²ரவிந்த³யுக³லம்ʼ
ஹஸ்தைர்-வஹந்தீம்ʼ ப⁴ஜே ||

முத்து பவளம் பொன் நீலம் வெண்மை வண்ணங்களுடன் கூடிய திருமுகங்களில் முக்கண்களுடையவள். சந்திரகலையை மகுடத்தில் தரித்தவள். தத்துவ மெய்ப்பொருளைக் கூறும் எழுத்துக்களின் வடிவானவள். வரமும் அபயமும் அருளும் கரங்களுடன், அங்குசம், சாட்டை, வெண்மையான கபாலம், கதை, சங்கு, சக்கரம், தாமரை மலர் இணைகள் ஆகியவற்றைக் கரங்களில் தாங்கியவள். அந்த காயத்ரி தேவியைப் போற்றுகிறேன்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ரூப லட்சணங்களுடன் கூடிய அற்புதமான தியான ரூபம் இது. சிறு வயதில் காயத்ரி மந்திர ஜபத்தைப் பயிற்சி செய்யத் தொடங்குபவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றே இவ்வளவு விஸ்தாரமான தியான ரூபம் கூறப்படுள்ளது என்று நான் எண்ணி வியந்ததுண்டு. 

எனது சொந்த அனுபவத்தில், சிறு வயது முதலே, ஓம், பூர்ப்புவஸ்ஸுவ:, என்று தொடங்கி ப்ரசோதயாத் வரையுள்ள மந்திரத்தின் ஐந்து பகுதிகளை ஐந்து முகங்களுடன் பொருத்தி, ஒவ்வொரு முறையும் அந்த முகங்களில் மனத்தை நிலைக்கச் செய்யும் பயிற்சியை உருவாக்கிக் கொண்டிருந்தேன். 

அந்த முகங்கள் அவற்றுக்கான லட்சணங்களுடன் அதே சமயம் பல்வேறு விதமாகக் கற்பனைக்கெட்டாத வகையில் தோன்றிக் கொண்டே செல்லும் அனுபவமும் ஏற்பட்டதுண்டு. பின்பு, ஐந்து முகங்களை ஐந்து தாமரைகளாக, ஐந்து வண்ண ஒளிகளாக, ஐந்து சுடர்களாக என்று பலவகையில் தியானித்ததும் உண்டு. 

ஜபம் வளர்ந்து செல்லச்செல்ல சிறிது நேரத்தில் அவையனைத்தும் முற்றாக ஒரு ஒளியில் கரைந்து போவதாகவும் உணர்ந்ததுண்டு. பின்பு, உருவமின்றி மந்திரத்தின் அக்ஷரங்களின் மீதே மனத்தை செலுத்தி ஜபம் செய்யும் பயிற்சியையும் அடைந்ததுண்டு.

காயத்ரி மந்திரத்தின் மகிமையும் பெருமையும் அளவிடற்கரியது. இன்று காயத்ரி மந்திரம் பல பள்ளிகளின் வழிபாட்டுப் பாடலாகவும், ‘காயத்ரி பரிவார்’ உள்ளிட்ட இயக்கங்கள் அனைத்து தரப்பு மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் பரவலாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம். இந்த மகாமந்திரத்தை அதன் முழுப்பலனும் விளங்குமாறு ஜபமும் தியானமும் இணைத்து முறையாகக் கற்பித்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

நன்றி ஜடாயு.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top