புரட்டாசி மாத சிறப்புகள் பகுதி 1

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி மாத பௌர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது புரட்டாசி மாத பௌர்ணமி ஆகும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பௌர்ணமி வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளின் அடிப்படையில் அதன் சிறப்புகள் மட்டுமின்றி, வழிபாட்டு பலன்களும் மாறுபடும். 

அதிலும் இந்த ஆண்டு புரட்டாசி மாதப்பிறப்பு நாளுடன் பௌர்ணமி இணைந்து வந்திருப்பது கூடுதல் சிறப்புக்குரியதாகும். புரட்டாசி மாத பௌர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம். பௌர்ணமி சிவன், விஷ்ணு இருவருக்குரிய உகந்த வழிபாட்டு நாளாகும். அதே போல் புரட்டாசி மாதமும் பெருமாள் மற்றும் அம்பிகை வழிபாட்டிற்கு உரியதாகும்.

புரட்டாசி பௌர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள். 

புரட்டாசி மாத பௌர்ணமியான இன்று விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்நாளில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நன்மைகள் கிடைக்கும் மற்றும் சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

புரட்டாசி பௌர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் உண்டாகும். 

புரட்டாசி பௌர்ணமி நாளில் தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும், தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள் என்பது ஐதீகம். அதனால் புரட்டாசி பௌர்ணமியில் அம்பிகையை நினைத்து தியானம் செய்வது, அபிராமி அந்தாதி போன்ற பாடல்கள் பாடுவது, அம்பிகையை வழிபடுவது, சிவனை நினைத்து கிரிவலம் வருவது போன்றவை சிறப்புடையதாகும்.

புரட்டாசி பௌர்ணமி நாளில் காலை வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்தால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். பகல் பொழுதில் சிவபெருமானை வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டுமில்லாமல், இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். 

மாலை வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவ வினைகள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும். 

புரட்டாசி பௌர்ணமியில் பெருமாளுக்கு துளசி கொண்டு அர்ச்சனை செய்வது மகாலட்சுமியின் அருளையும், பெருமாளின் அருளையும் பெற்றுத் தரும். இது ஏகாதசி விரதத்திற்கு இணையான வழிபாட்டு பலனை பெற்றுத் தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top