திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயத்திற்கு நவராத்திரி விழாவில் பங்கேற்க செல்லும் முன்னுதித்த நங்கை அம்மன், சரஸ்வதி மற்றும் முருகன்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயத்திற்கு நவராத்திரி விழாவில் பங்கேற்க செல்லும் முன்னுதித்த நங்கை அம்மன், சரஸ்வதி மற்றும் முருகன் பற்றிய பதிவுகள் :

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த போது அதன் தலைநகராக தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் இருந்து. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வழக்கம். 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடுடன் இணைக்கப்பட்ட பின்னர் இதன் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. 

திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்த நவராத்திரி விழா, 1840ம் ஆண்டில் அப்போதைய மகாராஜா காலத்தில் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. 

அதன் பின்பு நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்ரகங்கள் இங்கிருந்து ஊர்வலமாக, மேளதாளங்கள் முழங்க திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறது. இதனை அறிவிப்பு செய்யும் வகையில் வெள்ளிக்குதிரை செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 03, 2024 - ம் தேதி தொடங்கி அக்டோபர் 12, 2024 - ம் தேதி முடிவடைகிறது.

இதற்காக, முதலில் செப்டம்பர் 30, 2024 ம் தேதி காலை சுசீந்திரம் கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மேளதாளங்கள் முழங்க, ராஜ மரியாதையுடன் பக்தர்கள் மலர்தூவ பத்மநாபபுரம் நோக்கி புறப்படுகிறார்.

முன்னுதித்த நங்கை அம்மன் பத்மநாபபுரம் அரண்மனைக்கு செப்டம்பர் 30, 2024 ம் தேதி மாலை வந்து சேருகின்றனர். அதன்பின்னர் அன்று முழுவதும் ஓய்வெடுத்து அக்டோபர் 1, 2024 - ம் தேதி அதிகாலையில் பத்மநாபபுரத்திலிருந்து சுசீந்திரம் முன்னூதித்த நங்கை அம்மனும், வேளிமலை குமாரசுவாமியும் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய மூவரும் பிரம்மாண்ட ஊர்வலத்துடன் மன்னரின் உடைவாள் மாற்றப்பட்டு ராஜ மரியாதையுடன் ராஜ அணிவகுப்பு நடத்தப்பட்டு திருவனந்தபுரம் நோக்கி பயணத்தை தொடங்குகிறது. 

இந்த பயணம் வேளிமலை முருகன் தலைமையில் நடைபெறும். இதில் முருகன் யானை மீது முன்னிற்க பின் சரஸ்வதியும், முன்னுதித்த நங்கை தேவியும் பல்லாக்கில் புறப்படுகின்றனர்.

இந்த பயணத்தின் போது செல்லும் வழி முழுவதும் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு செய்து வழி அனுப்பி வைப்பார்கள். அன்றையதினம் இரவு குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் ஓய்வெடுக்கப்படுகிறது. அங்கிருந்து மறுநாள் அக்டோபர் 2, 2024 - ம் தேதி அதிகாலையில் மீண்டும் பயணம் தொடங்கப்பட்டு அன்றிரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை வந்தடைகிறது.

அங்கிருந்து நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 3, 2024 - ம் தேதி தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்கத்தில் உள்ள கொலு மண்டபத்திலும், குமாரகோயில் முருகன் ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோயிலிலும் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

நவராத்திரி பூஜைகள் முடிந்ததும் சுவாமி சிலைகள்‌ மீண்டும் அதைப்போன்று ஊர்வலம் மூலம் முருகன் முன்னிற்க தேவிகள் பல்லாக்கில் பின்தொடர மக்கள் வரவேற்புடன் வரவேற்கப்பட்டு அந்தந்த கோயில்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

ஆண்டுதோறும் இந்த நவராத்திரி பூஜைக்காக செல்லும் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி இவர்களை வரவேற்க மக்கள் தீராத பக்தியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிவானந்த சுவாமிகள்,
ஓம் நமசிவாய அறக்கட்டளை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top