ரிஷிவந்தியம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ரிஷிவந்தியம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பற்றிய பதிவுகள் :

தேவர்கள், வானவர்கள், முனிவர்கள் அனைவரும் சிவபெருமானின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கைலாச மலையில் கூடினர். பெருங்கூட்டம் அங்கு கூடியதால் வடக்கு பகுதி தாழ்ந்து தெற்கு பகுதி உயர்ந்து நின்றது. இதனால் சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி தெற்கு நோக்கி பயணம் செல்லுமாறு கூறினார்.  

அகஸ்திய முனிவரும் தெற்கு நோக்கிப் பயணித்தார். சிவபெருமான் அகஸ்திய முனிவருக்கு தெய்வீக திருமணத்தின் தரிசனத்தை அவர் விரும்பும் போது எல்லாம் பெறலாம் என்று கூறி சில ஆலயங்களில் தரிசனம் அளித்தார். அந்த ஆலயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விஜயநகர மன்னர்கள் காலத்தில் வன்னிய குல மக்கள் விவசாயத்திற்காக இந்த இடத்தை தோண்டினார்கள். அவர்கள் தோண்டும் பொழுது மண்வெட்டி குறிப்பிட்ட இடத்தில் தட்டுப்பட்டது. தோன்றுவதை நிறுத்திவிட்டு கவனமாக அந்த இடத்தை மெதுவாக தோண்டினார்கள். முடிவில் ஒரு சுயம்புலிங்கம் கிடைத்தது. அந்த லிங்கத்திற்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர் சூட்டினர். மண்வெட்டியால் வெட்டப்பட்ட தழும்பினை இன்றும் லிங்கத்தில் காணலாம். 

குரு நமச்சிவாயரின் சீடர் குக நமச்சிவாயர் ரிஷிவந்தியம் வழியாக சிதம்பரத்திற்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். இந்த இடத்தில் இருந்த பொழுது அவருக்கு மிகவும் பசியாக இருந்தது. அன்னை முத்தாம்பிகையிடம் சென்று மனமுருக தனக்கு அன்னமிடுமாறு வேண்டினார்.  

முத்தாம்பிகை அன்னை அவர் முன் தோன்றி, ஈஸ்வரன் வல பாகமாக இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் சிவபெருமானையும் தன்னையும் பாடுமாறு வேண்டினாள். அவர் கேட்டுக் கொண்டபடி இவர் பாடலைப் பாடும் போது அவருக்கு அன்னை தங்கப் பாத்திரத்தில் உணவு ஊட்டினார் என்று சொல்லப்படுகிறது. 

மற்றொரு புராணத்தின் படி சுகன்யா தேவி என்பவர் தனது கணவர் சியவன மகரிஷியுடன் நவராத்திரி விரதம் மற்றும் பூஜையை இந்த இடத்தில் அனுசரித்ததாகக் கூறப்படுகிறது. 

ராமபிரான் இங்குள்ள சிவனை வழிபட்டு ஞானம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த இடம் முற்காலத்தில் ரிஷி வந்த வனம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் அது மருவி ரிஷிவந்தியம் என்று கூறப்பட்டு வருகிறது இத்தலத்தை அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. 

இத்தகைய சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இந்த திருக்கோவிலுக்கு பக்தர்கள் அனைவரும் அவசியம் வந்து இறைவனை தரிசித்து இறை அருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இந்த திருத்தலமானது உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் இருந்தும் இந்த திருக்கோயிலை அடையலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top