ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம்

Siva
0
ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம்

கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.

அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது.

எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. 

இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று நமது புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம் செய்தால் எப்பேற்பட்ட கர்ம வினைகளும் நீங்கி ராஜபோக வாழ்வு கிட்டும் என்பது அகத்தியர் வாக்கு.

அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னாபிஷேகத்தின் போது, வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். 

ஐப்பசி பௌர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். 

சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது காலம், காலமாக நடந்து வருகிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா இந்த ஆண்டு நவம்பர் 15, 2024 வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் மிக சிறப்பாக பெற உள்ளது.

தானத்தில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது
அன்னதானம் மட்டுமே. ஒருவன் அன்னத்தை மட்டுமே தன் தேவைக்கு பிறகு போதும் என்கிறான், பிறவற்றை அவ்வாறு கூறுவது இல்லை.

உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.

உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.

நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவலிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. 

பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. 

சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்து வரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன. 

சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவவடிவம் தான். அண்டம் முழுக்க சிவவடிவம் தான். 

சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.

சிவ பெருமானை அபிஷேகபிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள்.

சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும். பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது. 

அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. 

ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்க நாதர் என்றும் குறிப்பிடுவர். 

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்ச நிலை சிறப்புடையதாகும். சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். 

எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும். அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும்.

சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணி அளவில் ரத்னசபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது பலரது அனுபவம்.

லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். எனவே மரகத லிங்கத்தின் மேல்பட்ட அன்னம் மிக மிக விஷேசம். அந்த அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர்.

எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது. தானத்தில் சிறந்ததும், உயர்ந்ததுமாக அன்னதானம் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது.

உணவின்றி உயிர் கள் கிடையாது.
உயிர்கள் இன்றி உலகம் கிடையாது.
அன்னம் என்னும் உணவே உயிர்களுக்கும், உலகிற்கும் ஆதாரமாக இருந்து வருகிறது என்பதால் அன்னதானம் பெருமைக்குரியதாகிறது. 

நைத்ரிய உபநிஷத்திலும், சாம வேதத்திலும் அன்னத்தின் பெருமையை எடுத்துரைக்கும் சுலோகங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

சிவசொரூபமாக இருக்கும் லிங்கம், ஓர் ஒப்பற்ற வடிவமாகும். நீள்வட்ட வடிவிலான அது எண்ணற்ற அர்த்தங்களையும், எல்லையற்ற சக்தியையும் தரக்கூடியது. 

சூரியனை சுற்றிவரும் கோள்கள் அனைத்தும் சிவலிங்க வடிவான நீள்வட்ட பாதையிலேயே பயணிக்கின்றன. உலகை இயக்கும் சிவலிங்க வடிவைப் போலவே உயிர்களை காக்கும் அன்னமும் நீள்வட்ட வடிவமானது. சக்தியளிப்பதில் இறைவடிவத்திற்கு ஒப்பானது. 

சிவவடிவானதும், மனிதர் களுக்கு மட்டுமின்றி இறைவனுக்கு நைவேத்தியமாகவும், யாகத்தின் அவிர்பாகமாகவும் அர்ப்பணிக்க கூடியதுமான அன்னத்தை அந்த சிவ வடிவத்திற்கே அபிஷேகம் செய்யும்போது, இறைவன் மனம் குளிர்ந்து தடையற்று அன்னத்தை தரக்கூடும்.

மேலும்,சிவலிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாகி அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று அனைத்தையும் ஆட்கொள்ளக்கூடும் என்பதாலும் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகத்தான் பால், தயிர், தேன் போன்று உலக உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தைக் கொண்டு, அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சிவவடிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது வழக்கமாயிற்று. 

ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கத்தை மறைக்கும்படியாக அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

அன்னாபிஷேகம் அனைத்து சிவ தலங்களிலும் நடைபெற்று வந்தாலும், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும்.

சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அன்னத்தின் ஒவ்வொரு திவலையும், சிவலிங்கமாக உருப்பெறும். அத்தகைய அன்னாபிஷேகத்தில் ஈடுபடுபவர்களும், அதனை தரிசிப்பவர்களும், இப்பிறவியில் எல்லா நன்மைகளும் பெறுவதுடன், பிறவிப்பிணியில் இருந்தும் விடுபடுவார்கள்.

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன்.

அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது.

அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

"அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

பிரசாதத்தை “ப்ர+சாதம்" என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித்தனர்.

முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். 

பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.

அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் .

“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது… இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமோ..

அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான். “மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார். “சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான். “பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…" என்றார் முனிவர்.

“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…" என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்.

அது என்ன அன்னத்துக்காக சாபம்?

சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம்.

சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர்.

திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது.

 அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறை படுத்தினார்கள்.

அன்னாபிஷேகத்தின் சிறப்புகள் என்ன ?

அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.

அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.

அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.

அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. 

காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

சோற்றுக்குள் சொக்கனின் ரகசியம்

'சோறுதான் சொக்கநாதர்' 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான். நமக்கு படியளப்பவன். சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். ருத்திரம் சமக்கம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.

சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.

ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அன்னாபிஷேக ஈசனை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். (பிக்ஷாண்டார்) ஈசனுக்கே படியளந்த அன்னபூரணியின் ஆசிகள் கிட்டும். சற்றுமுன் கோயிலில் சிவதரிசனம் செய்து மகிழ்ந்தேன்.

"ஊனுடம்பில் குடிகொண்டவனே
ஊழ்வினை பாராது படியளந்திடு"

மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது.

ஒரே சமயத்தில் பல லட்சம் லிங்கங்களைப் பூஜித்த பலன் கிடைக்க வேண்டுமா? அந்த ரகசியம் இதோ
 
மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிடச் 
சிறப்பாக சிவபூஜை செய்பவர் சிறப்பான லிங்கத்தை வைத்துப் பூஜிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான்.

அதனை அறிந்த கண்ணன் உன்னை விட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூஜை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர். அதனால் உன்னைவிட அவர்களே சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள் எனக் கண்ணன் சொல்கிறார். 

யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்குத் தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளைப் பார்க்கிறான். ஆனால், சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான். நடந்தவற்றைச் சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை, ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான். 

அப்போது கண்ணன், உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்கப் பொன்மணி தேவையா அரிசி மணி தேவையா எனக் கேட்க, அர்ஜுனனும் அரிசிதான் பொன்னை விட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு எனப் பழமொழியே வந்தது என்கிறான்.

கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்குச் சமம் தானே? ஒரு பானை நிறைய சாதம் வடித்தபின் அதனை வணங்கினால் பல பல்லாயிரம் லிங்கங்களை வணங்கியதற்குச் சமம் தானே அதனால் ஒரே சமயத்தில் பல ஆயிரம் லிங்கங்களை வைத்துப் பூஜித்த அவரே சிறந்த சிவபக்தர் என்கிறார் கண்ணன். 

எந்த லிங்கத்தையும் விட அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்துப் பூஜித்தால் பலன் அதிகம். அதனால் நித்தம் வீட்டில் சாதம் வெண்கலப் பானையிலோ, குக்கரிலோ வடித்தபின் அதற்கு ஒரு விபூதி பட்டையிட்டு திலகமும் சிறிது பூவும் வைத்து, முடிந்தால் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் இரண்டை வைத்து கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம். 

அதிலும் அன்னாபிஷேக மாதமான ஐப்பசியில் இதனை செய்வோர் எல்லா நலன்களும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top