நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரி வழிபாடு நாட்களில், வீடுகளிலும் வைணவக் கோவில்களிலும் வைக்கப்படும் கொலு, மிகவும் பிரசித்திப் பெற்றது.
பலவிதமான தெய்வ, மகான், மனித பொம்மைகளை, படிகள் அமைத்து அதில் அடுக்கி வைப்பார்கள். ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்படும் பொம்மையை வைத்து என்னை வழிபடுபவர்களுக்கு, நான் சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி பாகவதத்தில் அம்பாள் கூறியிருக்கிறார்.
எனவேதான் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து அலங்கரித்து அவளது அருளை வேண்டுகின்றனர். மனிதன் படிப் படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து பரிணாம வளர்ச்சி பெற்று, இறுதியில் கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனும் தத்துவத்தையே கொலுப்படிகளும், அதில் வைக்கப்படும் பொம்மைகளும் உணர்த்துகின்றன.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். துர்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரமும் படித்து வணங்க வேண்டும். சிறுவயது பெண் பிள்ளைகள், கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களை அம்மன் வடிவமாக ஆராதிக்க வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து, வீட்டில் தங்களால் முடிந்த அளவில் கொலுப் படிகள் அமைத்து அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மனமும், வயிறும் நிறையும் வகையில் செய்ய வேண்டும். இதன் மூலம் அம்பிகையின் அருளை நாமும் பெறலாம்.
நவராத்திரி ஐந்தாம் நாளான இன்று அன்னையை, சும்பன் எனும் அசுரனின் தூதுவனான சுக்ரீவன் வந்து சந்தித்து பேசுவான். அவனது தூது பேச்சை கேட்டப்படி அன்னை சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள். அந்த சமயத்தில் அவளது தோற்றம் புன்னகை ததும்ப காட்சி அளிப்பதாக இருக்கும். இத்தகையை வடிவத்தில் அன்னையை அலங்கரித்து வழிபட வேண்டும்.
இந்த அலங்காரத்தில் அன்னையை மோகினி என்பார்கள். வைஷ்ணவி என்றும் மகாகாளி என்றும் இந்த அவதாரத்தை சொல்வதுண்டு. எனவே காளிக்குரிய பாரிஜாத மலர் கொண்டு அன்னையை வழிபட வேண்டும். அப்போது நீலாம்பரி ராகத்தில் அன்னையை துதித்து பாடினால் காளிதேவி ரசித்து கேட்டு மகிழ்ச்சி அடைவாள்.
இன்று 6-வயது குழந்தையை அம்மனாக பாவித்து வழிபட வேண்டும். அந்த சிறுமிக்கு இலவங்கப்பட்டையும் சந்தனமும் கொடுக்கலாம். சிலர் தாமிரம் கொடுப்பதுண்டு. இன்றைய தினம் அம்பாளை பவளமல்லி மற்றும் சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது அதிக பலன்களை தரும். அது போல அம்பாளை மாதுளம் பழம் படைத்து வழிபடலாம்.
நைவேத்திய வகைகளில் தயிர் சாதம் படைக்க வேண்டும். இன்றைய வழிபாடு அனைத்து வகை செல்வங்களையும் கொண்டு வந்து நமக்கு தரும். மேலும் நீங்கள் எந்த செல்வம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அல்லது ஆசைப்படுகிறீர்களோ அவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்த னைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.