தென்னிந்தியாவில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படும், பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும். இதன் துவக்க நாளாக கொண்டாடப்படுவதே போகி பண்டிகையாகும்.
அதாவது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். "பழையன கழிதலும்...புதியன புகுதலும்" என்பதே போகி பண்டிகையின் நோக்கமாகும்.
இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது, எப்படி கொண்டாட வேண்டும், போகி அன்று என்ன செய்தால் வீட்டில் வருடம் முழுவதும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை தெற்கில் இருந்து வடக்கில் துவக்கும் நாளையே மகர சங்கராந்தி என்கிறோம். பழைய தீய விஷயங்களை விடுத்து, வாழ்க்கையில் புதிய பயணத்தை துவங்க வேண்டும் என்பதை உணர்த்தும் நாளே போகிப் பண்டிகையாகும்.
வீட்டில் செல்வ வளம், மாற்றம், வளர்ச்சி ஆகியவை புதிதாக நிறைய வேண்டும் என்பதற்காக வீடுகளை சுத்தம் செய்து, புதிய பயணத்திற்கு தயாராகும் நாள் போகி பண்டிகையாகும். 2025ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை வருகிறது.
போகி என்பது மழையின் கடவுளான இந்திரனை வழிபடுவதற்குரிய நாள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த நாளில் விவசாயிகள், தங்களின் விவசாயம் செழிக்க நல்ல மழையை அருள வேண்டும் என வேண்டிக் கொள்வது வழக்கம்.
ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்க, செல்வ வளங்களை நிறைவதற்கு இந்திரன் அருள் செய்யும் நாள் என நம்பப்படுகிறது. இது இந்திரனுக்கு மிகவும் பிடித்தமான நாளாக சொல்லப்படுகிறது. இயற்கைக்கு நன்றி செலுத்தி, அவற்றின் ஆசியை பெறும் நாளாக போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பல விதமான பெயர்களில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் போகி என்ற பெயரிலும், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும் அசாமில் மகி பிரு அல்லது போகாலி பிரு என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
வேறு வேறு பெயர்களில் கொண்டாடினாலும் இது கொண்டாடப்படும் விதமாக ஒன்றாக தான் இருக்கும். அனைவரும் விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் நாளாகவே போகி கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, அழகிய மலர்கள் மாவிலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். புதிதாக விளைந்த அரிசியில் அரைத்த மாவை பயன்படுத்தி மாக்கோலமிட்டு, கோலத்திற்கு நடுவே மாட்டுச் சாணம் பிடித்து வைத்து, அவற்றில் பூசணிப்பூவை வைக்க வேண்டும்.
விவசாயிகள் தங்களின் விவசாய பணிகளுக்க பயன்படுத்தும் ஏர் களப்பை போன்றவற்றிற்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து வணங்க வேண்டும். சூரிய பகவானையும், பூமி தேவியையும் வணங்கி விட்டு, விவசாய பணிகளை துவக்க வேண்டும். விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
சில பகுதிகளில் தீ மூட்டி தேவையற்ற பொருட்களையும், ஆடைகளையும் எரிப்பார்கள். பெண்கள் மந்திரங்கள் சொல்லியும், பாடல்கள் பாடியும் அந்த தீயை சுற்றி வந்து வழிபடுவார்கள். நண்பர்கள், குடும்பங்கள் ஆகியவை ஒன்றிணையும் நாளாக போகி பண்டிகை இருக்கும்.
புதிதாக விளைந்த அரிசி, பழங்கள், விளைச்சல் மூலமாக கிடைத்த பணம் ஆகியவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து போகியை கொண்டாடும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது.
பட்டம் விடுவது, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்துவது ஆகியனவும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. அனைவருடனும் பகை, கோபங்களை மறந்து ஒன்று கூடி, மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் போகி பண்டிகையை கொண்டாடுலாம்.