தைப்பூச விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தைப்பூச விரதம் பற்றிய பதிவுகள்;

உலகெங்கிலும் பக்தர்களை கொண்ட தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் தைப்பூசம் இந்த வருடம் பிப்ரவரி 11ஆம் தேதி அமைந்திருக்கிறது. 

இதையொட்டி முருகப்பெருமானின் அருளைப் பெற கடைபிடிக்க வேண்டிய 21 நாள் விரத முறை பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும்.

தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. பொதுவாக முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் கடைபிடித்தால் பல நன்மைகளை பெறலாம் என்பது நம்பிக்கை. 

ஒளி மயமான வாழ்க்கை வேண்டும் என விரும்பும் பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் முருகன் நாம் வேண்டியதை அருள்புரிவார். குரு பகவானின் ஆதிக்கத்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

21 நாட்கள் விரதம் தொடங்கும் முறை

முருகனுக்கு விசேஷமான நாட்கள் - செவ்வாய், வியாழன், ஞாயிறு. திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு விரதம் தொடங்கிட தனித்தனி நாட்கள் உண்டு. 

உதாரணமாக திருணமத்திற்காக விரதம் கடைபிடிப்போர் ஞாயிற்றுக்கிழமை விரதத்தை தொடங்கலாம்.

திதி நாள் கணக்கு வைத்து விரதம் தொடங்க நினைக்கும் பக்தர்கள் சஷ்டி திதியில் ஆரம்பிப்பது சிறப்பு. 

கார்த்திகை நட்சத்திரத்தன்றும் விரதம் தொடங்கலாம். முருகப்பெருமானுக்கு விசேஷமான எந்த நாளிலும் நீங்கள் விரதம் தொடங்கலாம்.

21 நாட்கள் முருகனுக்கு விரத முறை

விரதம் தொடங்கும் நாளில் வீட்டின் அருகே உள்ள முருகர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு கையில் காப்பு கட்டி கொள்ளவும்.

வீட்டில் முருகர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அரளிப்பூ, மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லி பூ கொண்டு அர்ச்சனை செய்யவும்.

முருனுக்கு நெய்வேத்தியமாக காய்ச்சிய பாலில் தேன் கலந்து வைக்கவும். வழிபாடு முடிந்த பிறகு நீங்கள் இதை பிரசாதமாக எடுத்துக் கொள்ளவும்.

21 நாட்களுக்கும் பட்டினியாக இருந்து விரதம் கடைபிடிப்பது சிரமமான காரியம். எனவே தினமும் ஒரு வேளை பட்டினியாக இருங்கள்.

அசைவ உணவுகளை விரத காலத்தில் கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

காலை, மாலை என இரண்டு நேரங்களுக்கு குளிக்க வேண்டும்.

காலையில் முருகர் படம் முன்பு அமர்ந்து என்ன தேவைக்காக விரதம் இருக்கிறீர்களோ அதை வேண்டிக் கொள்ளவும்.

மாலையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அப்போது தொழில் வளர்ச்சிக்காக விரதம் இருந்தால் வேல் மாறல் படிக்கவும்.

இந்த 21 நாட்களிலும் உங்கள் மனதைப் பக்குவப்படுத்தி விரதம் கடைபிடித்தால் முருகப்பெருமானின் அருளைப் பெற்று மன நிம்மதியோடு வாழலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top