தைப்பூச விரதம் இருக்கும் முறைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தைப்பூச விரதம் இருக்கும் முறைகள் பற்றிய பதிவுகள் :

முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வேண்டுதல்களில் ஒன்றான காவடி எடுக்கும் வழக்கம் தோன்றிய தலம் பழனி. காவடி எடுக்கும் முறை தோன்றிய நாளான தை மாத பெளர்ணமியில் விழா எடுத்து கொண்டாவதே தைப்பூச திருநாள் ஆகும். 

இந்த ஆண்டு தை மாத இறுதியில், அதாவது பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை தான் தைப்பூசம் வருகிறது. தைப்பூசத்திற்கு முன் 48 நாட்கள் முழுகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது உண்டு. 

முருகப் பெருமானுக்கு இருக்கப்படும் மிக நீண்ட விரதம் இது தான். 48 நாட்கள் முருகனை மனதார வேண்டி விரதம் இருந்து, காலை, மாலை இரு வேளையும் கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், வேல் மாறல் ஆகியவற்றை பாடி பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தால் முருகப் பெருமான் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார். நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு 48 நாள் தைப்பூச விரதம் இருப்பவர்கள் டிசம்பர் 25ம் தேதி துவங்கி, விரதம் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் 48 நாட்கள் விரதம் இருப்பது அனைவராலும் முடியாத காரியம் ஆகும். 

முருகப் பெருமானுக்கு 48 நாட்கள் தைப்பூச விரதம் இருக்க முடியாதவர்கள் ஜனவரி 21 ம் தேதி துவங்கி 21 நாட்கள் விரதம் இருக்கலாம். ஜனவரி 21ம் தேதி துவங்கி, பிப்ரவரி 11 வரை இந்த 21 நாள் தைப்பூச விரதத்தை இருக்கலாம். மாலை அணிந்தோ அல்லது மாலை அணியாமலோ இந்த விரதத்தை இருக்கலாம். 

21 நாள் தைப்பூச விரதம் இருப்பவர்கள் ஜனவரி 21ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்து முருகப் பெருமானிடம் நம்முடைய வேண்டுதலை சொல்லி விட்டு, அது நிறைவேறவும், விரதத்தை நல்ல படியாக நிறைவு செய்வதற்கும் அருள் செய்யும் படி கேட்டுக் கொண்டு விரதத்தை துவக்க வேண்டும். கந்தசஷ்டி கவசம் பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.

21 நாள் விரதம் இருக்கும் முறை :

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப் பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வைத்து, நம்முடைய வேண்டுதலை சொல்லி முறையிட்டு, விரதத்தை துவக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் கந்தசஷ்டி கவசம் பாடி விரதம் இருக்க வேண்டும்.

செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களில் 3 முறை கந்தசஷ்டி கவசம் பாடி விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்திற்கு உபவாசமாக விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். முருகனின் மந்திரங்களை சொல்லி, முருகன் நினைவிலேயே இருக்க வேண்டும்.

ஒருநாள் தைப்பூச விரதம் இருக்கும் முறை :

21 நாட்கள் தைப்பூச விரதம் இருக்க முடியாதவர்கள் தைப்பூச தினமான பிப்ரவரி 11 அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கேற்றி வைத்து, உபவாசமாக விரதம் இருக்கலாம்.

அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு, 3 முறை கந்தசஷ்டி கவசம் பாடலை பாராயணம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் உபவாசமாக இருந்து, மாலையில் விளக்கேற்றி முருகப் பெருமானுக்கு ஏதாவது நைவேத்தியம் படைத்து வழிபட்டு, அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். 

முடிந்தவர்கள் தைப்பூசம் அன்று முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பது மிகவும் விசேஷமானதாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top