பஞ்சாக்ஷர ரகசியம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பஞ்சாக்ஷர ரகசியம் பற்றிய பதிவுகள் :

பஞ்ச அட்சரம் என்பது ஐந்து எழுத்துக்கள் என்று பொருள்படும். பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும். தமிழில் ஐந்தெழுத்து என்று சொல்கின்றோம். இதில்,

ந - நிலம்

ம - நீர்

சி - நெருப்பு

வ - காற்று

ய - வானம்

இந்த நமசிவய என்னும் ஐந்து எழுத்து மந்திரத்தை தேவர்களும், ஞானிகளும், ரிஷிகளும் மற்றும் மஹா முனிவர்களும் இறைத்தன்மையை உணர்ந்து ஏற்படுத்திய உன்னத மந்திரம். 

இயற்கையெனும் இறைவனை ஒரே சொல்லில் அழைக்க இந்த திருவைந்தெழுத்து மந்திரம் மனிதர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றது 

இதனை கருத்தில் கொண்டே இந்த பஞ்சாட்சரம் உருவாக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்து த்யானித்து கவனித்தால் புரியும்.
 
நிலமும் நீரும் ஒருபுறமும் காற்றும் வெளியும் மறுபுறமும் இருக்க நெருப்பு மத்தியில் உள்ளதாக அமைந்துள்ளது.
 
நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும். வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கும். நெருப்பு தனித்தன்மை வாய்ந்தது. அதனால் அது மத்தியில் இரண்டையும் சமநிலையில் கொண்டு அமைந்துள்ளது.

இதனை மனிதனின் உடலில் உள்ள காற்று, நீர், வெளி, மண் மற்றும் நெருப்போடு இணைக்கும்போது மனிதன் அசாத்திய பலவான் ஆகின்றான். 

காற்று, மண், நீர், வெளி, நெருப்பு இவைகளின் சக்தியை அளவிட முடியாது. இவைகள் தனித்தனியே இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை.

ஆகவே ரிஷிகளும், முனிவர்களும், முன்னோர்களும் இதனை பஞ்ச பூதங்கள் என்றனர். மனிதர்கள் எல்லோருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை.

இதனாலேயே மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் இருப்பதில்லை.

சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள்.

சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள்.

சிலர் குணக்குன்றாக இருப்பார்கள்.

சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள்.

சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள்.

இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான். அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது.

நமசிவய எனும் பஞ்சாட்சரம் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைவினை நீக்கி அவனை முழு பஞ்சபூத ஆதிக்கத்திற்கு கொண்டுவருகின்றது.

அதாவது மனிதனின் உடலில் பஞ்சபூதங்களில் எதனுடைய சக்தி குறைக்கப்பட்டு எதனுடைய சக்தி கூட்டப்பட்டுள்ளதோ அதனை சமமாக்கி அந்த மனிதனை முழுமையாக்குகின்றது. இதுவே பஞ்சபூத சக்தியாகும்.

அவ்வாறு முழுமையை காணும் மனிதன் மிக அதிசயமான உணர்வுகளால் தூண்டப்பட்டு மனிதர்களில் மேன்மையை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான். அவனுக்கு உலகின் இயக்கமும், அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது. தான் யார் என அறிகின்றான்.

தான் யார் என அறிந்தவன் இறைவனாரை அறிந்தவனாகின்றான். இறைவனாரை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை,. ஆகவே அவன் தான் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான். அவர்களைத்தான் சாதாரண மக்களாகிய நாம் ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சித்தர்கள் என்கின்றோம்.

பஞ்சபூத சம நிலையை கண்டதால் இந்த அசாத்தியமான மாற்றம் நேர்கின்றது. பஞ்சாட்சரம் சொல்வதால் மனிதனின் அந்தராத்மா தூண்டப்பட்டு அதுவரை அவன் கண்ட, கேட்ட, அனுபவித்த அனைத்தையும் பொய்யென படம் போட்டு காட்டி அவனை அவனது எண்ணங்களை, செயல்களை, கர்மாவை தூய்மையாக்கி அந்த மனிதனை மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்கின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top