1. இரண்யகர்ப்ப தானம் :
பொன்னால் 72 அங்குலம் உயரமும் அதில் மூன்றம்சம் அகலமும் உள்ள தாமரை போன்ற கும்பஞ் செய்வித்து அதில் தயிர், நெல், பால் முதலிய நிறைத்து வேதிகை செய்வித்து அதன் மேல் இரண்டு மரக்கால் எள்ளைப் பரப்பி அதன் மீது கும்பத்தை நிறுத்தித் தான கற்ப விதிப்படி பூசித்துப் பிரதட்சண முதலிய செய்து எஜமானன் அந்த இரண்ய கும்பத்தில் ஒரு விஸ்வாச காலம் இருத்தல் வேண்டும்.
இப்படி யஜமானன் கடத்திருந்து வெளி வரு முன் ஆசாரியன் இரண்ய கும்பத்திருக்கும், இரண்ய கற்பனாகிய புருஷனுக்குக் கர்ப்பாதானம், பும்சவனம், சீமந்தம், சாதகர்மம் முதலிய கிரியைகள் செய்தல் வேண்டும். பின் யஜமானன் அதை விட்டு வெளி வந்து அந்தக் கலசத்துடன் கிராமாதிகளையும் தானஞ் செய்ய வேண்டும். அவ்வகை செய்தவன் 100 கோடி கல்பம் பிரமலோகத்தில் வசித்துத் தனது பிதுருக்களை நரகத்திலிருந்து நீக்குவன்.
2. இரண்யாச்வ தானம் :
3 முதல் 1000 பலமுள்ள பொன்னால் குதிரை ஒன்று செய்வித்து நானா வித உபகரணமான ஒரு சையத்தையும், 8 சுவர்ண கலசங்களையும் வேதிகையில் தாபித்து, விதிப்படி பூசிப்பதாம். இப்படிச் செய்தவன் தேவர்களால் பூசிக்கப்பட்டு இந்திரபதம் அடைவான்.
3. இரண்யாச்வரத தானம் :
3 முதல் 1000 பலமுள்ள பொன்னால் ரதம் ஒன்று செய்வித்து அதில் தன் இஷ்ட தேவதையைப் பொன்னாற் செய்வித்து நிறுத்தி அத்தேர்க்கு 8 அல்லது 4 பொற்குதிரைகள் பூட்டி வஸ்திராதிகளால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் பாபம் நீங்கித் தேசோசரீரனாய்ச் சிவபதம் அடைவன்.
4. உபயகோமுகி தானம் :
பசுவின் பிரசவகாலத்தில், பசுங்கன்றின் பாதி தேகம் தாயின் வயிற்றிலும் மற்றப் பாதி வெளியிலும் இருக்கக் கண்டு பசுவினைப் பொன், வெள்ளி, முத்து முதலானவைகளால் அலங்கரித்துத் தட்சணையுடன் வேதியனுக்குத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் தரணி தான பலனடைவதன்றிப் பிதுருக்களையும் திருப்தி செய்தவனாகிறான்.
5. கனக கல்பலதிகா தானம் :
5 முதல் 1000 பலமுள்ள பொன்னால் நீர்க்காக்கை அன்னம் முதலிய பட்சிகள் வித்தியாதர பிரதிமைகள் முதலியவற்றோடு கூடிய 10 கல்பகக் கொடிகளைச் செய்வித்து விதிப்படிப் பூசித்துத் தக்க வேதியர்க்குத் தானஞ் செய்வதாம். இவ்வகை புரிந்தவன் சத்திய உலகம் அடைவன்.
6. கனக காமதேனு தானம் :
1000, 500, 250 கணக்குள்ள பலத்தோடு கூடிய பொன்னால் கன்றோடு கூடிய பசு செய்வித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் தேவர்களால் பூசிக்கப்பட்டுச் சிவபதம் பெறுவன்.
7. கல்ப விருட்ச தானம் :
3 பலம் முதல் 1000 பலம் வரையில் பொன்னால் திரிமூர்த்தி பிரதிமைகளுடன், 5 கிளைகளோடு நானா வித பட்சிகள் பழங்கள் முதலியவற்றுடன் கற்பகத்தரு செய்வித்துக் கிழக்கில் சகளத்திர காம தேவயுக்தமான சந்தான விருட்சத்தையும் தெற்கில் லட்சுமியோடு கூடிய மந்தார விருட்சத்தையும், மேற்கில் சாவித்திரியோடு கூடிய பாரிசாத விருட்சத்தையும், வடக்கில் சுரபியோடு கூடிய ஹரிச்சந்தன விருட்சத்தையும் நிருமித்து விதிப்படி ஓமாதிகள் பூஜை முதலியன செய்து நமஸ்கரித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் சித்த, சாரண, கின்னா, அப்சரசுகளால் சேவிக்கப்பட்டுச் சூரிய வருண விமானத்தேறி 100 கல்பம் விஷ்ணு பதத்தில் இருப்பன்.
8. கார்ப்பாஸ் தானம் :
ஐந்து பாரம் முதல் 20 பாரம் நிறையுள்ள பருத்தியைத் தக்கவர்க்குத் தானஞ் செய்வதாம். இதைச் செய்தவன் உருத்திரலோகம் அடைவன்.
9. கிருத பர்வத தானம் :
5 கும்பம் நெய் முதல் 20 கும்பம் நெய்யைத் தக்கவர்க்குத் தானஞ் செய்வதாம். இப்படிச் செய்தவன் சிவபதம் பெறுவன்.
10. கிருஷ்ணாஜின தானம் :
மாசி, ஆடி, கார்த்திகை மாதங்களிலும், பெளர்ணிமை, சந்திர சூரியகிரகணம், உத்தராயண துவாதசி புண்ணிய காலங்களில், ஆகிதாக்னியாகிய வேதியனுக்கு விதிப்படி கிருஷ்ணாஜினம் மான் தோல் தானஞ் செய்தலாம். இவ்வகை செய்தவன் சிவசாயுச்யம் அடைவன்.
11. குடதேனு தானம் :
நாலு பாரம் முதல் கூடிய வரையில் பெல்லத்தால் பசுவும் கன்றும் செய்வித்து ஆபரணங்களால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்விதம், வெண்ணெய், எள், தான்யம், சர்க்கரை, உப்பு, ரத்னம், பொன் முதலியவற்றாலும் செய்வித்த மந்திர ஆவாகனஞ் செய்து தானஞ் செய்யின் நெடு நாள் கோ உலகத்தில் சகல சௌபாக்கியங்களை அநுபவித்துப் பின் விஷ்ணுபதம் அடைவன்.
12. குடபர்வத தானம் :
மூன்று பாரம் முதல் 10 பாரம் வரையிலும் பெல்லத்தால் பர்வதம் செய்வித்து விதிப்படி தானஞ் செய்வது. இவ்வகை செய்தவனுக்குப் பசுபதி சாந்நித்யமாவர்.
13. கோசகஸ்திர தானம் :
3 பலம் முதல் கொண்டு 1000 பலமுள்ள பொன்னால் 10 பசுக்கள் செய்வித்து அவற்றினிடையில் ஒரு பொன் விருட்சம் செய்வித்து நிறுத்திப் பின் 1000 பசுக்களை, பொன், வெள்ளி, முதலானவைகளால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் பாபம் நீங்கித் தன்னுடைய 101 கோத்திரத்துடன் தானும் கைலையில் வசிப்பன்.
14. சர்க்கரா பர்வத தானம் :
இரண்டு பாரம் முதல் எட்டுப் பாரம் வரையில் சர்க்கரையை மலை போல் குவித்துத் தானஞ் செய்வது. இதைச் செய்தவர் சிவ பதமடைவர்.
15. சப்த சாகரத் தானம் :
5 முதற்கொண்டு 1000 பலம் அளவுள்ள பொன்னால் சாண் அளவுள்ள 7 கும்பங்கள் செய்வித்து முதற் கும்பத்தில் உப்பு நிறைத்து அதில் சரஸ்வதியுடன் கூடிய பிரமதேவனையும், இரண்டாவதில் பால் நிறைத்து விஷ்ணு மூர்த்தியினையும், 3 -வதில் நெய் நிறைத்துச் சிவமூர்த்தியையும் 4 - வதில் பெல்லம் நிறைத்துச் சூரியனையும், 5 -வதில் தயிர் நிறைத்துச் சந்திரனையும், 6 -வதில் சர்க்கரை நிறைத்து லட்சுமியையும், 7 -வதில் சுத்தோதகம் நிறைத்துப் பார்வதியார் முதலியவர்களை எழுந்தருளுவித்து விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்வது இங்ஙனம் செய்தவன் விஷ்ணு பதம் அடைவன்.
16. சுவர்ண பர்வத தானம் :
250 பலம் முதல் 1000 பல் பொன்னினால் பர்வதம் செய்வித்து விதிப்படி தானஞ் செய்யின் பிரமபதம் அடைவன்.
17. சையா தானம் :
நல்ல மரத்தில் கட்டில் செய்வித்து அதனைப் பல விதமாக அலங்கரித்துப் பாயல் விரித்துத் தீர்த்தம், சந்தனம், புஷ்பம், தாம்பூலம் மற்றும் ஸ்திரீ புருஷர்களுக்கு வேண்டியவும் அமைத்து நவக்கிரக பூசை செய்து சில விஷ்ணுக்கள் இதனால் மகிழக் கடவர் எனப் போக்கியனுக்குத் தானஞ் செய்தல். இதனால் சுவர்க்கம் உண்டாம்.
18. தார தானம் :
100 முதல் 1000 பலமுள்ள பொன்னினால் ஜம்புத் தீவு போல் நானா வித அநேக பர்வத சாகர நகர கிராமங்கள், பாரதாதி நவ வருஷங்களோடு கூடிய பூமி, அவைகளைச் சுற்றிக் கடல் செய்வித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் தன் கோத்திரங்களுடன் 3 கல்ப காலம் வைகுண்டத்தில் வசிப்பன்.
19. தான்ய பர்வத தானம் :
இந்தப் பர்வததானம், லவணத்தாலும், பெல்லத்தாலும், பொன்னினாலும், வெண்ணெயாலும், எள்ளினாலும், இரத்தினத்தினாலும், வெள்ளியினாலும், சர்க்கரையாலும் மலை போல் செய்வித்து வியதிபாத முதலான புண்ய காலங்களில் 1000 மரக்கால் நெல்லை மேருவாக வைத்து நவமணிகளால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வது. இத்தானஞ் செய்தவன் தெய்வ உலகடைவன்.
20. திக்பர்வத தானம் :
வேதியர் எட்டுப் பெயர் வருவித்து அவர்களை ஆசனத்திலிருக்கச் செய்து அவர்களின் நடுவில் சிவமூர்த்தியைப் பூசித்துப் பத்துக் கழஞ்சு பொன்னாற் பதினொரு விமானம் செய்வித்து அதை வேதியர்க்கு விதிப்படி தானஞ் செய்து பல வேதியர்க்கு அன்னமிடலாம்.
21. தில பர்வததானம் :
மூன்று மரக்கால் முதல் பத்து மரக்கால் எள்ளினைப் பர்வதம் போல் குவித்து விதிப்படி பூசித்துத் தானம் செய்வது. இவ்வகைச் செய்தவன் சுவர்க்கம் அடைவன். 10 சாண்டு கோல் ஒன்று நட்டு அது மறைய எள் கொட்டி அதன் மேல் மண்டலம் செய்து ஆடையால் மூடி மலர் தூவி அதில் சிவமூர்த்தி பள்ளி கொள்வதாய்த் தியானித்துச் சிவமூர்த்தியைப் பூசித்து விதிப்படி தட்சிணையுடன் பிராமணருக்குக் கொடுத்தலாம். திலதேனு, திலபத்ம தானங்களைக் தனித்தனி காண்க.
22. துலா புருஷ தானம் :
இத்தானஞ் செய்பவன் பரிசுத்தனாய்ப் பதினாறு முழத்திற்குக் குறையாமல் மண்டபஞ் செய்வித்துப் புண்ணியா வாசனம் முடித்து ஏழடி வேதிகை செய்வித்து நான்கு குண்டங்கள் செய்விக்க வேண்டும்.
பிறகு வேதிகையில் கலசத் தாபனம் செய்து அதில் திரிமூர்த்திகளைப் பூசித்து ஏழு முழம் உள்ள தேவதாரு முதலிய இரண்டு தம்பங்களை இரண்டு முழம் பூமியில் புதைத்து அதன் மேல் சுவர்ண முதலியவைகளால் அலங்கரித்துத் துலா தண்டம் நிறுத்தி லோகமயமாகும் தட்டுகளைச் சங்கிலிகளில் மாட்டி அத்துலாத்தைக் கொடி முதலியவைகளால் அலங்கரித்துக் குருவையும் வேதம் அறிந்த எட்டு ருத்விக்களையும் வருவித்து நான்கு திக்குகளில் இவ்விருவரை நிறுத்திப் பிரமாதி தேவர்க்கு ஓமஞ் செய்து எஜமானன் ஆசாரியருடன் பலி பூசைகள் முடித்து அத்தினத்தில் எல்லோரும் உபவசிக்க வேண்டும்.
மறு நாள் ஸ்நானாதிகள் முடித்துப் பரிசுத்தனாய் நானாவித பூஷணாலங்கிருதனான எஜமானன், ஆசாரியனோடு துலைக்கு நமஸ்கரித்துத் துலா ஆரோகணஞ் செய்தல் வேண்டும். அதில் ஒரு தட்டில் எஜமானனிருந்து மறு தட்டில் ஸ்வர்ணத்தை வைத்துச் சமமாகத் தூக்கி க்ஷண நேரம் அதிலிருந்து அதினின்றும் இறங்கி அதிலுள்ள திரவியத்தில் பாதி ஆசிரியனுக்கும் மிகுதியை பிருத்விக்குகளுக்கும் கொடுத்து அவர்கள் ஆக்கினையால் மற்றவர்களுக்கும் தானாதிகள் கொடுத்தல் வேண்டும். இப்படிச் செய்தவன் கீர்த்தியையும், ஆயுளையும் அடைந்து விஷ்ணு பதம் அடைவன்
23. பஞ்சலாங்கல தானம் :
சாரமுள்ள நூறு கிராமங்கள் அன்றி யதாசக்தி கிராமத்தையும், மரத்தாற் செய்யப்பட்ட ஐந்து கலப்பைகளையும், பொற் கொம்பால் அலங்கரிக்கப்பட்ட பத்து எருதுகளையும் ஐந்து 1000 பலம் உள்ள பொற் கலப்பைகளையும் கன்றோடு கூடிய பசுக்களையும் விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் விமானம் ஏறிச் சிவபதம் அடைவன்.
24. பிரமாண்ட தானம் :
இருபது பலம் முதற்கொண்டு 1000 பலம் வரையில் தன் சக்திக்கு இயன்ற அளவு 100 அங்குல நீளம் இரண்டு கலசங்களும், எட்டுத் திக்கு யானைகளும், அஷ்ட திக்குப் பாலகரும் உள்ள ஒரு பிரமாண்டத்தைச் செய்வித்து அதில் திரிமூர்த்தி விக்ரகங்களை எழுந்தருளச் செய்து பட்டு வஸ்திராபரணாதிகளால் அலங்கரித்து அந்தப் பிரமாண்டத்தை இரண்டு மரக்கால் எள்ளில் நிறுத்தி விதிப்படி பூசை முதலிய முடித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகை செய்தவன் பாபம் நீங்கி இந்திரபதம் அடைவன்.
25. மகாபூதகட தானம் :
நூறு அங்குல நீளமுள்ளதாய், நாநா வித ரத்தினங்கள் இழைத்த கும்பத்தைப் பால் நெய் முதலியவைகளால் நிறைத்து அதில் ஒரு சுவர்ண கற்ப விருட்சத்தை நிறுத்தி விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் கோடி சூர்யப் பிரகாசமுள்ள விமானமேறி வைகுண்ட பதம் அடைவன்.
26. ரத்னதேனு தானம் :
வச்சிரம், பவளம், வைடூர்யம், கோமேதகம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், சர்க்கரை, பெல்லம் முதலியவற்றால் புராணாதிகளில் கூறிய படி ரத்னபசு செய்வித்து விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்வதாம். இவ்வகை செய்தவன் மதனசமான காந்தியுள்ளானாய் விஷ்ணுபதம் அடைவன்.
27. ரத்னபர்வத தானம் :
முந்நூறு பலம் முதல் 1000 பலம் வரையில் இரத்தினத்தால் பர்வதஞ் செய்வித்துத் தானஞ் செய்வதாம். இது செய்தவர் பிரமகத்தி தோஷம் நீங்கி விஷ்ணுபதம் அடைவர்.
28. ரௌப்பிய பர்வத தானம் :
2500 பலம் முதல் 10,000 பலம் வரையில் ரௌப்பிய பர்வதஞ் செய்வித்துத் தானஞ் செய்யின் சிவலோகமடைவர்.
29. லவண பர்வத தானம் :
நாலு மரக்கால் முதல் பதினாறு மரக்கால் வரையில் உப்பை விதிப்படி தானஞ் செய்யின் சத்தி உலகம் அடைவர்.
30. விச்வ சக்ரதானம் :
ஆயிரம் முதல் 250 பலம் பொன்னால் பதினாறு இலைகளுள்ள விச்வ சக்கரத்தை ஏழு ஆவரணத்தோடு கூடியதாகச் செய்வித்துச் சங்கு சக்கிரதரனாகிய விஷ்ணு மூர்த்தியை எட்டுத் தேவியருடன் பிம்பத்திற் செய்வித்திருத்தி விஷ்ணுமூர்த்தியின் தசாவதாரப் பதுமைகளை நிருமித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் அரிபதம் அடைவான்.
31. ஹேமஹஸ்திரத்தானம் :
ஐந்து பலம் முதல் ஒரு பாரம் வரையில் பொன்னால் புஷ்பரதம் செய்வித்து நான்கு பொன் யானைகளும், இரண்டு உயிர் யானைகளையும் பூட்டி அவ்விரதத்தின் மத்தியில் லட்சுமி நாராயணனையும் இரண்டு பக்கங்களில் பிரம்ம மகேச்வராதி தேவ விக்கிரகங்களையும் எழுந்தருளச் செய்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்தலாம். இத்தானஞ் செய்தவன் வித்தியாதரரால் பூசிக்கப்பட்டுச் சிவபதம் அடைவன்.
32. பருத்தி தானம் :
இத்தானத்தால் யம தூதரிடத்தில் அச்சம் உண்டாகாது.
33. தானிய தானம் :
இத்தானத்தினால் யமனும், தூதுவரும் சந்தோஷித்து ஜீவனுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பர்.
34. பூ தானம் :
பூ தானம் செய்யின் எத்தனை அடிகள் தானம் செய்தானோ அத்தனை காலம் சுவர்க்கத்தில் இன்புறுவன்.
35. மராடி தானம் :
மராடி தானம் செய்தவன் மார்க்கத்தில் முள் முதலியவற்றால் துன்புறாது குதிரையேறி யமபுரஞ் செல்பவன்.
36. குடை தானம் :
குடை தானம் செய்தவன் நிழலிலுள்ள வழியிற் செல்வன், மழையால் துன்பமடையான்.
37. தீபதானம் :
தீபதானம் செய்யின் இருள் வழியில் பிரகாசத்துடன் செல்வன். மாண்பினது முதல் ஓராண்டு தீப தானஞ் செய்யின் பொன் குலத்தோரையும் சுவர்க்கத்தில் புகுவிக்கும். ஆசனப் பலகையும் செம்பு ஸ்தாலியும் சுயம்பாகப் பொருளும் தானஞ் செய்யின் மரித்தவன் மார்க்கத்தில் வழியில் இனிது செல்வன்.
38. வஸ்திர தானம் :
வஸ்திர தானம் செய்யின் யமதூதர் நல்லுருவத்துடன் தோன்றுவர்.
39. பூமி, சுரபிகள், சுவர்ணம் தானம் :
இம்மூன்றும் தானங்களில் விசேடமாம். எவ்விதமெனின் பூமி விஷ்ணு சம்பந்த மாதலாலும், சுவர்ணம் அக்கினியின் மகவாதலாலும், சுரபிகள் சூரிய புத்திரிகளாதலாலும் விசேஷமாம். இவற்றைத் தானஞ் செய்வோன் அம்மூன்று லோகத்தையும் அடைவன்.
40. பருத்தி தானம் :
இது மகாதானமாகும். இது தேவர், அந்தணர் முதலியோர்க்குப் பூணு நூற்கு உபயோகம் ஆகையால் மிகச் சிறந்ததாம். இத்தானம் செய்தவன் சுவர்க்க வாசியாகச் சில நாள் வசித்து அழகிய மேன்மை உடையவனாய்ச் சிவபதம் அடைவன்.
41. திலதானம், கோதானம், தானியதானம், சுவர்ணதானம், பூதானம் :
இத்தானங்களைச் செய்யின் மகா பாதகங்கள் நசிக்கும். இவைகளை உத்தம பிராமணருக்கே கொடுத்தல் வேண்டும்.
42. திலதானம், இரும்பு தானம் :
இவ்விரு தானஞ் செய்தலால் யமன் உவப்படைகிறான்.
43. இலவண தானம் :
இறக்கிறவனுக்கு எமனிடம் அச்சம் உண்டாகாது.
இவ்விதமாக தானங்கள் செய்து இறைபலனினைப் பெறுவோம்.