விரதம் அல்லது உபவாசம் என்பது அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்காக நம்மை அர்ப்பணிப்பது ஆகும். நம் முன்னோர்கள் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வழிபாட்டிற்காக அர்ப்பணித்துள்ளனர்.
ஒவ்வொரு மாத சதுர்த்தி விரதமும் ஒவ்வொரு தனிச்சிறப்பை கொண்டுள்ளது. அந்த வகையில் விருப்பங்களை நிறைவேற்றும் வழிபாடாக மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தி விரதம் அமைந்துள்ளது.
மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தி திதியானது இன்று நள்ளிரவு 01:08 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11:39 மணி வரை உள்ளது. இந்த சதுர்த்தி விரதம் இருக்கும் முறை குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழு மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விரதம் இருக்கும் முறை:
அதிகாலையில் எழுந்து உடல் தூய்மை செய்து வீட்டு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி பூஜைகள் செய்ய வேண்டும்.
அதன் பின் அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முழுவதும் விநாயகர் ஸ்லோகம் மற்றும் விநாயகர் பாடல்கள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் "ஓம் கம் கணபதயே நம;" என்ற மூல மந்திரத்தை நாள் முழுவதும் மனதார தியானத்து கொண்டு இருக்கலாம்.
உபவாசம் இருப்பவர்கள் தங்கள் கைகளால் பூக்களை பறித்து மாலையாகவோ அல்லது பூக்களாகவோ விநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும். விநாயகருக்கு பிடித்த அருகம்புல் மாலை முக்கியமானது.
சூரிய உதயத்தில் விரதத்தை தொடங்கி சூரிய அஸ்தமத்தில் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தங்கள் உடல்நிலையை பொறுத்து எந்த உணவும் உட்கொள்ளாமல் இருப்பது சிறப்பானது. உடல்நிலை சரியில்லாதவர்கள், விரதம் முழுமையாக கடைப்பிடிக்க இயலாதவர்கள் பாலும், பழமும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
மாலையில் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட்டு, விநாயகருக்கு படைத்த நெய்வேத்தியத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
உங்கள் விரதம் முழுமையாக முடிவடைய உங்கள் கைகளால் ஒரு நபருக்கு அன்னத்தை தானமாக வழங்கி நிறைவு செய்ய வேண்டும்.
அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், விநாயகரை மனதில் நிறுத்தி, முழுமையான இறை பக்தியுடன், இறை சிந்தனையுடன் உங்கள் வேலைகளை செய்யலாம்.