நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இறை வழிபாட்டிற்குகந்த மார்கழி மாதத்தின் மகத்துவம் பற்றிய பதிவுகள் :
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆணி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும் ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் அமைகிறது.
இதில் அதிகாலையான பிரம்ம முகூர்த்த காலம் மார்கழி மாதம் வருகிறது. இதனால் மார்கழி மாதம் சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மஹாவிஷ்ணு கூறியுள்ளார்.
மார்கழி மாதம் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களை குறைத்து இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறு எந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள் .
அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டும் அல்ல உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். மேலும் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால் தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்கிறார்கள் .
மார்கழி மாதத்தில் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காக தோழியை எழுப்ப செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது.
சிவனுடைய அடியார்களே கணவனாக வரவேண்டும் அவனோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம். மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் இடுவது தொன்று தொட்டு நடந்து வருகிறது .
மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கிறது. மாட்டுச்சான உருண்டையில் பூசணிப்பூவை சொருகி கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்த பூ உருண்டையை வறட்டியாக தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கல் அன்று ஆற்றில் விடுவார்கள்.
மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
திருப்பாற்கடல் கடையப்பட்ட போது முதலில் விஷம் எழுந்ததும் சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில் தான்.
இந்திரனால் பெருமழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்ட போது கோவர்த்தனகிரி மலையை கிருஷ்ணர் குடையாக பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில் தான்.
மஹாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவதும் மார்கழியில் தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது.
அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில் தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிப்பது இறைவனின் அருளை தரும்.