தை மாதம் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக அனைவரும் அமாவாசை நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். தை அமாவாசை நாளில் நீர் நிலைகளில் நீராடி, நம்முடன் வாழ்ந்து மறைந்த மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் போது அவர்களின் ஆசியை முழுதாக பெற முடியும் எனவும், புனித நீராடினால் கர்மாக்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக தை மாதம் தேவர்களுக்கான விடியற்காலை நேரம் என்பதால், இந்த நாளில் எப்போது வழிபாடுகள் மேற்கொள்ளலாம் , என்னென்ன முறைப்படி வழிபாடுகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக அறிந்துக் கொள்ளலாம்.
தை அமாவாசை திதி :
2025 ஆம் ஆண்டிற்கான தை அமாவாசை வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதி இரவு 07:36 PM மணிக்கு தொடங்கி அடுத்த நாள், அதாவது ஜனவரி 29 ஆம் தேதி இரவு 06:05 PM மணி வரை முடிவடையும் என குமரி பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நாளில் நீர்நிலைகள் உள்ள இடங்களில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது நம்முடைய கர்மாக்கள் நீங்குவதோடு, மூதாதையர்களின் ஆசி மனப்பூர்வமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எப்போது தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
தமிழகத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் தை அமாவாசை நாளில் உலக பிரசித்திப் பெற்ற இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் உள்ள அக்னீ தீர்த்தத்தில் நீராடுவார்கள். பின்னர் கடற்கரையில் வைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்த சடங்குகளை ஜனவரி 29 ஆம் தேதி காலை 6 மணி முதல் 7.20 மணி வரை மேற்கொள்ளலாம். ஒருவேளை இந்த நேரத்தைத் தவறவிடும் பட்சத்தில், அதே நாளில் காலை 9 மணி முதல் 11. 55 மணி வரைக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
இந்த நாளில் விரதம் இருக்கும் மக்கள் வழிபாடுகள் அனைத்தையும் முடித்த பின்னதாக, விரதத்தை மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரைக்குள் முடித்துக் கொள்ளலாம். இதையடுத்து வீடுகளில் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
ஒருவேளை உங்களால் கோயில்கள் அல்லது நீர் நிலைகளுக்குச் சென்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்கான சூழல் இல்லையென்றால் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
வீடுகளில் வழிபாடுகள் மேற்கொள்ளும் போது மேற்கூறியுள்ள நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதோடு வாழ்க்கையில் எப்போதும் கஷ்டம் மட்டும் நிறைந்துள்ள மக்கள் தங்களின் கஷ்டங்கள் தீர வேண்டும் என்றால், தை மற்றும் ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களின் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.