கல்வி, கலை வித்தையில் சிறக்க சியாமளா நவராத்திரி வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கல்வி, கலை வித்தையில் சிறக்க சியாமளா நவராத்திரி வழிபாடு பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு ஆண்டும் நான்கு தேவியர்க்கும் நான்கு விதமான நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி விழாவும், ஆடி மாதத்தில் வாராகி நவராத்திரி விழாவும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி விழாவும், தை மாதத்தில் சியாமளா நவராத்திரி விழாவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி ஒன்பது நாட்கள் அடுத்து வரும் நவமி வரை இந்த சியாமளா நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

காளிதாசர் இயற்றிய ‘ஸ்ரீ சியாமளா தண்டகம்’ என்னும் நூலில் சியாமளா தேவியை அழகாக வர்ணித்து இருப்பார். ராஜசியாமளா, மந்திரிணி, மாதங்கி என பல பெயர்களில் இத்தேவி அழைக்கப்படுகிறார்.

மதங்க முனிவரின் மகளாக அவதரித்த சியாமளா தேவி, தசமஹா வித்யாக்களுள் ஒன்பதாவது வித்யாவாக அறியப்படக்கூடியவர். நேர்மை, பேச்சு திறன், கல்வி, கலைகள் போன்ற நிலைகளில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கு அவற்றுக்கு அதிபதியான சியாமளா தேவியை வணங்க வேண்டும்.

பண்டாசுரனுடன் லலிதா தேவி போருக்குப் புறப்பட்டபோது அவரின் கையில் இருந்த மனஸ்தத்துவமான கரும்பிலிருந்து தோன்றியவளே இந்த சியாமளா தேவி. லலிதா தேவியின் அக்ஷர சக்தியாக விளங்கக்கூடியவள் இந்த சியாமளா தேவி. 

பண்டாசுரன் வதத்தின்போது லலிதா தேவிக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்தாள் எனக் கூறப்படுகிறது. சியாமளா தேவி வீணையை கையில் தாங்கியபடி காட்சி தரக்கூடிய சங்கீத கலையின் தலைவியாவாள். சங்கீதக் கலைகளில் உச்சத்தை தொட விரும்புபவர் சியாமளா தேவியை வழிபாடு செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் இவள் விளங்குவதால் சியாமளா தேவிக்கு ‘மந்திரிணி’ என்னும் பெயரும் உண்டு. எனவே, சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே லலிதா பரமேஸ்வரி தேவி எதையும் செய்வாள். 

அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி கலைகளின் தேவதையாவாள். அரச போக வாழ்வை அளிப்பவளும் இவளே. கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்குவளம் பெற சியாமளா தேவியை வணங்க வேண்டும்.

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன், ராஜமாதங்கியின் அம்சமாக விளங்குகிறாள். எனவே, இந்த சியாமளா நவராத்திரி நாட்களில் சியாமளாவை மீனாட்சி அம்மனாக வழங்கினால் சங்கீதக் கலையனைத்தும் வாய்க்கும் என்பது திண்ணம். அதோடு, மாணவ, மாணவியர் கல்வியில் உயர்வு பெறுவர், அறிவாற்றல் பெருகும்.

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திரு அவதாரம் செய்வதாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல் வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யா ஆரம்பம் செய்கிறார்கள். 

அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்குக் கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும். சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜசியாமளா தேவி.

கலை தெய்வம் என்று அறியப்படுகிற சரஸ்வதி தேவியின் கைகளில் வீணை இருக்கிறது. வீணைதான் சங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். ஒவ்வொரு தெய்வத்தின் கையில் உள்ள வீணைக்கும் ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது சரஸ்வதி தேவியின் வீணை. 

ராஜ சியாமளா தேவியும் சரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பாள். சரஸ்வதி தேவி நல்ல சிவப்பு நிறம். இவளோ சாம்பல் கருப்பு அதனால்தான் இவளுக்கு சியாமளா என்று பெயர். சியாமளா நவராத்திரி நன்னாளில் சியாமளா தேவியை வணங்கி, கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் அருளோடு சகல யோகத்தையும் பெறுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top