அன்னை பராசக்தியின் போர் படைத்தளபதியாக வாராஹி உள்ளதால், வாராஹியை வழிபடுபவர்களுக்கு மூன்று உலகங்களிலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பது ஆன்றோரின் வாக்கு.
ராஜராஜ சோழனுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய தெய்வமாக வாராஹியே விளங்குகிறாள். மற்ற கோவில்களில் எந்த விழாக்கள், உற்சவங்கள் துவங்கினாலும் முழு முதற் கடவுளான விநாயகருக்கு தான் முதல் பூஜை நடைபெறும்.
ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் முதல் பூஜை வாராஹிக்கே நடத்தப்படும் மரபு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வாராஹி அம்மனை வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்த விதமான தீய எண்ணங்களும் இல்லாமல், மன தூய்மையுடன் தொடர்ந்து, வாராஹிக்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனமுருக வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும்.
வீட்டில் வாராஹியின் படம் அல்லது விக்ரஹம் வைத்து வழிபட நினைப்பவர்கள் வடக்கு நோக்கி, வாராஹியின் முகம் இருக்கும் படி அமைத்து வழிபட வேண்டும். வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது.
வாராஹியை வழிபட வேண்டியவர்கள் :
27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழிபட வேண்டும்.
அதே போல் 12 ராசிகளில் மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட கஷ்டங்கள் என்பது அவர்களை அண்டாது. மேலும், சனி ஆதிக்கம் உள்ளவர்கள், சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபட வேண்டும்.
வழிபட வேண்டிய நாள், திதி :
ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசையால் தொல்லை அனுபவிப்பவர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனை வழிபடலாம்.
இந்த நாட்களில் வாராஹிலை தீபமேற்றி வழிபட்டால், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து மீளலாம்.
இது தவிர வாராஹி அம்மனை வழிபட ஏற்ற நாளான பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.
பஞ்சமி திதியன்று வாராஹி துதிகளை பாடி, மனமுருக அழைத்து வேண்டினால் வாராஹி அம்மன் வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.