ஏகாதசி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான நாளாகும். ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் நாமும், நமது குடும்பத்தினரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருள் பெறலாம்.
மருத்துவரீதியாக, மாதம் இருமுறை வரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், மன நலத்திற்கும் உதவும்.
ஏகாதசி விரதம் இருப்பதை எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி விரதம் இருப்பதால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களை கடை பிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது.
மேலும் ஏகாதசி விரதத்தினை கடைபிடிக்காமல் தானிய உணவினை உண்பது, பாவங்கள் செய்த கர்மத்தை உண்டாக்கும். எனவே தான் ஏகாதசி அன்று குறிப்பாக தானிய உணவு வகைகள் தவிர்க்கப்படுகின்றன.
ஏகாதசி என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். இங்கு ஏகாதசி என்பது அமாவாசையிலிருந்து 11வது நாளையும், பௌர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை களைபிடிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் இருப்பது எவ்வாறு?
ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம்
தானியங்களால் ஆன உணவை எவ்வகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும். குறிப்பாக அரிசி, சோறு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட உணவுகளை உண்பதும் ஏகாதசி
விரதத்தை முறிக்கும்.
நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட்ட வேண்டும்.
காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ் , அவரை போன்ற பயறு வகைகளைச் சார்ந்த காய்கறிகளும் விலக்கப்பட வேண்டும்.
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பை வேண்டும்.
இத்தனை கவனம் தேவைப்படுவதால் முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் (நிர்ஜல ஏகாதசி) ஏகாதசி விரதம் களைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் சமைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வர்.
ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும்
எவ்வாறு?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று இரவு கடைசி உணவு உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம். அதைப்போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.
விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தம் ஊட்கொண்டும், மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக படைத்த தானிய உணவை ஊட்கொள்வதுமாகும்.
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது எந்த அளவு
முக்கியமோ அந்த அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும்.