வட மொழியில் "திந்திரிணி' என்பது புளியமரத்தைக் குறிக்கும். "திந்திரிணிவனம்' மருவியே "திண்டிவனம்' ஆனது. "திண்டி' என்றால் "அடர்ந்த' எனப் பொருள்.
காஞ்சிபுரத்தில் பிரம்மா யாகம் செய்தபோது, நான்கு திசைகளுக்கும் நான்கு வாயில்களை நிர்மாணித்து யாக சாலையை அமைத்தார். அவற்றில் திந்திரிணிவனம், வனத்வயம் என்ற தெற்கு யாகசாலை நுழைவு வாயிலாகவும் மாமல்லபுரம் கிழக்கு வாயிலாகவும், விரிஞ்சிபுரம் மேற்கு வாயிலாகவும் அமைந்தது.
திந்திரிணிவனத்தில் திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள். தவம் செய்துவந்த முனிவர்களைக் கொடுமைப்படுத்தவே, அவர்கள் நரசிம்மரிடம் முறையிட்டனர். வேண்டுதலை ஏற்ற பெருமாள் தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து, "வெற்றியோடு வா'' என்று அனுப்பி வைத்தார். அதன்படி அனுமனும் அரக்கர்களை அழித்து வேள்வி தடையின்றி நடைபெறச் செய்தார். இங்குள்ள உற்சவ மூர்த்தி அனுமார் சங்கு, சக்கரதாரியாக சேவை சாதிக்கிறார்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் தென்பாகத்தில் தாயார் சந்நிதியும், நடுவில் மூலவர் சந்நிதியும், வடபாகத்தில் ஆண்டாள் சந்நிதியும் , ஆண்டாள் சந்நிதி பின்புறம் ஆஞ்சநேயர் சந்நிதியுடனும் அமைந்துள்ளன.
கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி, கருடாழ்வார், அவரது மண்டபத்தை அடுத்து மகா மண்டபம், உடையவர் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, யாகசாலை அமைந்துள்ளன. கோதண்டராமர், வேணுகோபாலர் எழுந்தருளியுள்ளனர்.
கருவறையில் கருணாமூர்த்தியாக மூலவர் நரசிம்மர் பிரம்மாண்டமாக அமர்ந்தருள, இடது தொடை மேல் அமர்ந்த லட்சுமி தேவியுடன் அமர்ந்த கோலத்திலும், கனகவல்லித் தாயார் தனி சந்நிதியில் எழுந்தருள்கிறார். உற்சவர் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்திலும் எழுந்தருள்கின்றனர்.
திருமால் மனித உடலும், சிங்கத் தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரத்தில் இரணியனை அழித்தார். நரசிம்மரின் கோபத்தை மார்க்கண்டேய மகரிஷி, தணித்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்க மகாலட் சுமியிடம் வேண்டினார்.
எனவே, இந்தத் தலத்தில் சாந்தமூர்த்தியாக பிரகலாதவரதனாக காட்சி தந்தார். இரணியன் மகன் பிரகலாதன், நாராயணனின் பக்தன். பக்தனுக்காகத் தாயார் நரசிம்மரிடம் கைகூப்பியவாறு இருக்கிறார்.
பொதுவாகவே கடன்கள், நோய்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் நரசிம்மர் கவசம், நரசிம்மர் அஷ்டகம், நரசிம்மர் துதி, நரசிம்மர் நகஸ்துதி, நரசிம்மர் மந்திரம், , நரசிம்மர் போற்றி போன்றவற்றை சொல்வதோடு லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்லோகங்கள், மந்திரங்களை சொன்னால் விரைவில் பலன் கிடைக்கும்.
"தம்பதி ஒற்றுமை அதிகரிக்க, கடன் தொல்லைகள் நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷம் விலக, திருமணத்தடைகள் நீங்க இங்கு வழிபடலாம். திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்களும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பிரார்த்தித்தால் பலன் பெறலாம்.
பிரதோஷத்தில் அர்ச்சனை செய்தால் சகல சௌபாக்கியங்களும் பெருகும். சனிப் பிரதோஷத்தில் வணங்கினால் எண்ணியது நிறைவேறும். தோஷங்கள் நீங்கும்.
சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பானகத்தை நைவேத்தியம் செய்து வழிபட எட்டு திசைகளில் இருந்தும் நன்மை வீடு தேடி வரும். வீட்டில் தீயசக்திகள் இருந்தால் விலகி ஓடிவிடும்' என்பது ஐதீகம்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திண்டிவனம் நகர் லட்சுமி நரசிம்மர் கோயில் பிற்காலப் பல்லவர் காலத்தில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மேற்கில் உள்ள ராஜாங்குளம் விஜயநகர மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் அருகேயுள்ள சஞ்சீவிராயர் பெரிதும் வணங்கப்படுகிறார். அவர் பெயரால் அந்தப் பகுதி "சஞ்சீவிராயன் பேட்டை' என அழைக்கப்படுகிறது.