தை மாத சோமவார பிரதோஷம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தை மாத சோமவார பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

தை மாதத்தில்தான் சூரியன் வட அரைக்கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் தொடங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ம். 

பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. 

பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். 

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவமிருந்தார். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். 

அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதமிருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டார். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். 

மேலும், இந்த பிரதோஷ நாளில் சந்திர திசை நடப்பவர்களும், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்களும் கோவிலிற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். 

நமது மனதில் தோன்றும் பல்வேறு சிந்தனைகளுக்கு மனோகாரகனான சந்திரனே காரணம். அதனால் சந்திரனை பிறையாக சூடிய எம்பெருமானை இந்நன்னாளில் தரிசிப்பது எண்ணிலடங்கா நன்மைகளை நமக்கு அருளும். 

அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். 

வழிபாடு :

பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். 

சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். 

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். 

இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். 

பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும். 

சோமவார பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்தும், நந்திதேவருக்கு செவ்வரளியும், அருகம்புல் மாலையும் வழங்கி வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். 

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜெபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். 

பிரதோஷ பலன்கள் :

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். 

வறுமை நீங்கி செல்வம் பெருகும். 

மேலும், தொழில் மேன்மை அடையும். 

கடன் பிரச்சனைகள் தீரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top