2025 மாசி மகம் புனித நீராடல்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 2025 மாசி மகம் புனித நீராடல் பற்றிய பதிவுகள் :

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மகம், மஹாமகம் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தேவாதி தேவர்களும் கும்பகோணம் மஹா மகம் குளத்தில் வந்து நீராட வருவார்கள் என்பது ஐதீகம். 

அத்தகைய சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மஹாமகம் குளத்தில் வருந்தோறும் வரும் மாசி மகத்தன்று நீராடினாலும், மஹாமகத்தன்று நீராடிய பலனை பெற முடியும்.

மாதங்களிலேயே எல்லா நாளும் வழிபாட்டிற்கு உரிய நாளாக இருப்பது மாசி மாதத்தில் தான். மாசி மாதத்தில் மட்டும் தான் திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்தும் சிறப்பு பெறுவதாக அமையும். 

சூரிய பகவான் கும்பம் ராசியில் பயணிக்கும் இந்த மாதத்தில் அதிகாலை வேளையில் புனித நீராடுவதும், பித்ரு தர்ப்பணம் செய்வதும் மிகவும் விசேஷமானது.

மாசி மாதம் மகம் நட்சத்திரமும், பெளர்ணமியும் இணையும் நாளை மாசி மகம் என கொண்டாடுகிறோம். மாசி மகத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகா மகம் குளத்தில் புனித நீராடுவது பல ஜென்மங்களில் செய்த பாவங்களை போக்கும் சக்தி படைத்தது. இந்த மாசி மகம் பல வகையிலும் சிறப்பு பெற்ற நாளாகும்.

மாசி மகம் அன்று கும்பகோணம் மஹாமகம் குளத்திற்கு சென்று, அதிகாலையில் நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடலாம். கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆறு, கோவில் குளங்கள், நீர் நிலைகளில் நீராடலாம். 

மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் இந்த புண்ணிய நதிகள் எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால் இந்த நீர்நிலைகளில் நீராடி, கும்பகோணம் குளத்தில் நீராடி பலனை பெறலாம். அதிகாலையில் நீராடிய பிறகு, அதே நீர் துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.

திதி, அமாவாசை தர்ப்பணம் வழக்கமாக கொடுப்பவர்களாக இருந்தாலும், மாசி மகத்தன்று தவறாமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். 

இவ்வாறு கொடுப்பதன் மூலம் இதுவரை அமாவாசை நாளில் விரதம் இருந்து திதி கொடுக்க தவறிய பாவம், தர்ப்பணம் கொடுக்கும் போது தெரிந்தும், தெரியாமல் செய்த பாவங்கள் என ஏழு தலைமுறைகளிலும் தெரியாமல் செய்த பாவங்கள் கூட தீரும்.

அருகில் ஆறு, குளம் போன்றவற்றில் நீராட வாய்ப்பு இல்லாதவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டின் பூஜை அறையில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பூஜைக்கு எப்போதும் எவர்சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. 

செம்பு, பித்தளையால் ஆன பாத்திரம் அல்லது மண்ணால் ஆன பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் சிறிது மஞ்சள் தூளை போட்டு, வாசனை பொடி, கங்கை தீர்த்தம் இருந்தாலும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

அந்த தண்ணீருக்கு தீப, தூப ஆராதனை காட்டி, நவ நதிகளின் பெயர்களை சொல்லி, "எங்கள் வீட்டில் உள்ள இந்த பாத்திரத்தில் உள்ள நீரில் எழுந்தருளி, எங்களின் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கி, புனித நீராடிய பலனை வழங்க வேண்டும்" என வேண்டிக் கொண்டு, அந்த தண்ணீரை சிறிது தலையில் தெளித்து, கொஞ்சம் குடித்துக் கொள்ளலாம். 

அந்த தண்ணீரை வைத்து குளிக்கவும் செய்யலாம். சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் நீர், பூஜையில் வைத்த பிறகு அது தீர்த்த்திற்கு இணையான புனித தன்மையை பெற்று விடுவதால் இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டிலேயே புனித நீராடிய பலனை பெறலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top