சமயபுரம் மாரியம்மன், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்கக் கூடியவள். இக்கோவில் மாசி மாதம் இறுதியில் துவங்கப்படும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தம்.
இவ்விழாவின் போது அம்மனுக்கு கூடை கூடையாக விதவிதமான பூக்கள் கொண்டு வந்து பக்தர்கள் காணிக்கையாக தருவார்கள். வழக்கமாக திருவிழா என்றால் தங்களின் துன்பங்கள், குறைகள் தீர பக்தர்கள் தான் சுவாமியிடம் வேண்டிக் கொண்டு விரதம் இருப்பார்கள்.
ஆனால் பக்தர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக அம்மனே பச்சை பட்டினி விரதம் இருக்கும் வைபவம் இக்கோவிலில் மட்டுமே நடக்கும் அற்புதமான நிகழ்வாகும். இதுகுறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுவது சமயபுரம். இங்கு அம்மனே சிவ - சக்தி சொரூபமாக விளங்குவதால், பக்தர்கள் இந்த அம்மனை தாயாக நினைத்து வழிபடுகின்றனர்.
நோய்கள், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், பிரச்சனை என எந்த குறையை சொல்லி முறையிட்டாலும், நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர்களுக்கு சமயத்தில் வந்து காக்கும் தெய்வமாக சமயபுரம் மாரியம்மன் விளங்குகிறார்.
இக்கோவிலில் மாவிளக்கு நேர்த்திக்கடன் மற்றும் உறுப்புக்கள் உருவ பொம்மை வாங்கி உண்டியலில் செலுத்துவது முக்கிய பிரார்த்தனையாக இருந்து வருகிறது.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்புக்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு உண்டு. இங்கு மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன் சுதை சிற்பமாக காட்சி தருவதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது. மாறாக அலங்காரங்கள் மட்டுமே செய்யப்படும். உற்சவ திருமேனிக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோவிலில் நடக்கும் விழாவிக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விழா, பூச்சொரிதல் விழா ஆகும். ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு துவங்கி, பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இவ்விழா நடைபெறும்.
இந்த 28 நாட்களும் உலகத்தில் உள்ள பக்தர்களின் நலனுக்காக அம்மனே, பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். இதற்கு பச்சை பட்டினி விரதம் என்று பெயர்.
அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும் நைவேத்தியம் எதுவும் படைக்கப்படாது. மாறாக துள்ளு மாவு, நீர்மோர், கரும்புச்சாறு, பானகம், இளநீர் ஆகியன மட்டுமே நைவேத்தியமாக படைப்படும்.
இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா மார்ச் 12 ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்க உள்ளது. மார்ச் 12 ம் தேதி அதிகாலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி, காப்பு கட்டப்படுகிறது.
பக்தர்களுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் இந்த 28 நாட்களும் அம்மனின் வாட்டமாக இருப்பதாக ஐதீகம். இந்த சமயத்தில் அம்மனின் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக அதிக அளவிலான பூக்கள், வேப்பிலை அம்மனுக்கு சாத்தப்படும்.
பூச்சொரிதல் விழாவில் அம்மனுடன் சேர்ந்து ஏராளமான பக்தர்களும் காப்பு கட்டி விரதம் மேற்கொள்வார்கள். பூச்சொரிதல் விழாவின் நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள்.