நரசிம்மஅவதாரம்

0

நரசிம்மஅவதாரம் ஏன்? 




விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலிய வனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந் தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது.

எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

இந்த நிலையில் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் கயாதுக்கும் மகனாக பிரகலாதன் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.

பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.

இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை.

பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அப்போது லட்சுமியும், நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.

நரசிம்மருக்கு பல்வேறு வடிவங்கள் புகழ்ந்து கூறப்படுகின்றன. அதில் மிகமிக முக்கியமானது லட்சுமி நரசிம்மர் வடிவமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தான் இந்த பிறவியானது அனைத்து வகையிலும் பூர்த்தியாகும்.




Tags :

Narasimmam , narasima , narasimmer , narasimar , narazim

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top