திருமணம்
தமிழர் பாரம்பரியத்தின் சிறப்பு: இரு மனம் இணையும் திருமணம்...!
திருமணம் என்பது ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வை மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை நிகழ்வாகும். இத்திருமண நிகழ்வானது ஒவ்வொரு சமுதாயத்திலும் மாறுபட்டு அமைகிறது. அவ்வகையில் தமிழர்கள் திருமணத்தில் பின்பற்றப்படும் பந்தகால் நடுதல், காப்பு கட்டுதல், ஹோமம் வளர்த்தல், கும்பம் வைத்தல், தாரை வார்த்தல், தாலி கட்டுதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், கோவிலுக்கு அழைத்துச் செல்லல், மணமகள் பால் பொங்கலிடுதல், மறுவீடு அழைத்தல் ஆகியவை முக்கியமான நிகழ்வாகும். இவற்றில் சிலவற்றைப் பற்றி காண்போம்.
பந்தகால் நடுதல் :
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ ஆகிய மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம், பூ, நவதானியம் இவற்றை போட்டு பந்தகால் நட வேண்டும். பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவுவார்கள். மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது இதன் நோக்கமாகும்.
ஹோமம் வளர்த்தல் :
அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும். ஹோமத்தின் மூலம் நவகிரகங்களைத் திருப்திபடுத்த வேண்டும். ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும்.
தாரை வார்த்தல் :
திருமணச்சடங்குகளில் மிக முக்கியமானது தாரை வார்த்தல். என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் என மணமகளின் பெற்றோர், தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறுமகள் ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி. எனவே, தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை, மணமகனின் கை, மணப்பெண்ணின் கை, மணப்பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை. இந்தவரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும். உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்.
தாலி கட்டுதல் :
தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும். தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.
அம்மி மிதித்தல் :
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செய்வதற்கு பயன்படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும், மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.
மறுவீடு :
மணமகளின் பெற்றோரும் உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று விருந்துண்டு, மகிழ்ந்து உறவை வலுப்படுத்துவது. ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும், புகுந்தவீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே மறுவீடு ஆகும்.
ஓம் நமசிவாய
Tags :
Marriage , therumanam , wedding , therumannam , kalyanam , maruveedu , ammi , thalli , thali . thaarai , tharai , panthakaal, panthakal