பஞ்சபூத குளியல்

0

பஞ்சபூத குளியல்!





நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள்தான் பஞ்சபூத குளியல் எனப்படுகிறது. இக்குளியலின் நோக்கம், "உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான்.

கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறிகளும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன. இவற்றை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும் கழிவு வெளியேற்றமே நோய்களிலிருந்து விடுபட எளிய வழிகள்.

நீர் குளியல்


நீர் குளியல் என்பது கழுத்து வரையுள்ள நீரில் குளிப்பதுதான். இன்றைய நகரங்களில் ஆறு, குளம், ஏரி போன்ற இடங்கள் இல்லாததால் கழுத்து வரையுள்ள நீரில் நின்று குளிப்பது சாத்தியம் அல்ல. ஆகவே வீட்டில் தொட்டிக் கட்டியோ அல்லது  பாத் டப் வாங்கியோ இந்த நீர் குளியல் (தொட்டி குளியல்) சிகிச்சை செய்து கொள்ளலாம். பாத் டப்பில் கழுத்து முதல் முழங்கால் வரை ஆடையின்றி உடல் நனைந்திருக்க வேண்டும். நீரில் உள்ள அழுத்தம் மற்றும் குளிர்ந்த தன்மை உடலில் பட,  உடல் குளிர்ச்சி அடைந்து பல நன்மைகளை செய்யும். நீரின் அழுத்தம் உடலில் உள்ள அமிலத்தை வெளியேற்றும். 15 நிமிடங்கள் வரை தொட்டிக் குளியலில் ஈடுபடலாம். உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் குணமாகும். பெல்விக் ஏரியா (pelvic area) பிரச்னைகளான மாதவிலக்கு பிரச்னை, கர்ப்பப்பை பிரச்னை, சிறுநீரகம், மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.

சூரியக் குளியல்


அதிகாலை சூரியன், உடலுக்கு பலவிதத்தில் நன்மையை செய்யும். சூரியனின் வெப்பக் கதிர்கள் நம் உடலில் படுவதே சூரியக் குளியல். மெல்லிய ஆடையை அணிந்து கொண்டு, சூரியன் முன் 10-15 நிமிடங்கள்வரை படுத்துக்கொள்ளலாம். வியர்வை வெளியேறும். நோய்கள் குணமாகும். நச்சு நீக்கும் செயல்முறையில் சூரியக் குளியலின் பங்கு மிகையானது. ஹார்மோன்கள் சுரக்கும் செயல்பாட்டை சமன் செய்யும். தூக்கமின்மையை போக்கும். ரத்த ஒட்டத்தை சீர் செய்யும். கண் பார்வை திறன் ஒங்கும். இயற்கையாகவே வைட்டமின் டி கிடைப்பதால் சருமம், எலும்பு, கண்கள் ஆகியவற்றிற்கு நல்லது. பற்களை உறுதியடைய வைக்கும். கொழுப்பை குறைக்கும். சருமநோய், பக்கவாதம், கீல்வாதம், எலும்புருக்கி நோய் போன்றவை வராது.


களிமண் குளியல்


ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் கிடைக்கும் வண்டல் மண்ணை எடுத்து முன்பெல்லாம் உடலில் பூசி குளித்து வந்தனர். சோப், பாடி வாஷ் போன்ற ரசாயனக் கலவைகள் கொண்ட ஆயத்த பொருட்கள் அன்று இல்லை. ஆனாலும், அவர்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், சீரான சருமத்துடன் இருந்து வந்தனர். நம் முன்னோர்கள் பயன்படுத்தியது களிமண். இன்று இதுவே களிமண் சிகிச்சையாக மாறியுள்ளது.

எறும்பு, கரையான் கட்டுகின்ற மண்ணில் இயற்கை சத்துக்கள் அதிகமாக இருக்கும். அவை உடலில் படும்போது நமக்கு நன்மையை செய்கிறது. ஒன்றரை கிலோ அளவு மண்ணை இரவில் ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் உடல் முழுதும் பூசவும். காலை வெயிலில் (9-10) மணியளவில் பெரியவர்கள் அரை மணிநேரமும், குழந்தைகள் 10 நிமிடங்களும் நிற்கலாம். உடலிலிருக்கும் மண் வறண்டு போய் உலர அரை மணி நேரத்திற்கு பிறகு மண்ணை தட்டி விட்டு குளிக்கலாம். மலச்சிக்கல், தலைவலி, ஒற்றை தலைவலி, கழிவுகள் வெளியேறமால் என்னென்ன நோய்கள் வருமோ அவையெல்லாம் குணமாகும். சருமத்தை அழகாக்கும், சருமத்திற்கு கண்டிஷனராக செயல்படும். புத்துணர்வு கிடைக்கும். தசைகள் தளர்வடைந்து மனமும், உடலும் ஓய்வு பெறும். ரத்த ஒட்டத்தை சீராக்கும். உடலில் உள்ள pH அளவை சமன் செய்யும். களிமண்ணில் கிடைக்கும் சத்துக்கள் நம் உடலில் சேரும்.


நீராவிக் குளியல்


சளி, தலைவலி எனில் வீட்டில் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு ஆவி பிடிப்போம். அதுபோல உடல் முழுவதும் நீராவி படுவது போல செய்யும் சிகிச்சைதான் நீராவிக் குளியல். இன்று அழகு நிலையங்களில் செய்யும் சிகிச்சை இது. ஆடையின்றி 10-15 நிமிடங்கள் வரை உடல் முழுவதும் நனைந்திட வேண்டும். சிகிச்சை முடிந்த பின் அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம், உடனே குளிக்கக் கூடாது. இச்சிகிச்சையால்  உடலில் உள்ள துவாரங்கள் வழியே கழிவுகள் வெளியேறும். ரசாயனங்களால் மூடிவிட்ட சரும துவாரங்கள் கூட திறந்து உடலின் கழிவை வெளியேற்றும். இதனால் சருமம் சீராக சுவாசிக்கும். தலை, கை, கால், பாதம் என தனித்தனியாக நீராவி சிகிச்சையை செய்து கொள்ளலாம். உடல் வலி தீரும். புத்துணர்வு கிடைக்கும், இளமை தோற்றம் நீடிக்கும். மூப்படைதலை தடுக்கும். சரும பிரச்னைகள் வரவே வராது.

வாழைக் குளியல்


முகாம்களில் இந்த சிகிச்சை செய்து கொள்வது சிறப்பு. வீட்டில் செய்து கொள்ள நினைப்போர், கொஞ்சம் மெனக்கெடுதல் அவசியம். முகாம்களில் மருத்துவர் துணையோடு உள்ளாடைகளை அணிந்து கொண்டு இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம். நீண்ட வாழை இலையில் உள்ளாடைகளோடு படுத்துக் கொள்ளலாம். பின் உடல் மேலே வாழை இலைகளை போர்த்தி கயிறால் கட்டி விடவேண்டும். சுவாசிப்பதற்காக மூக்கு பகுதியில் மட்டும் சிறு ஓட்டை போட்டு கட்டலாம். வீட்டில் வாழைக் குளியலை மேற்கொள்பவர்கள், வீட்டு வராண்டாக்களில் செய்யலாம். ஆனால் மொட்டை மாடியில் செய்யக் கூடாது. திறந்தவெளி என்பதால் இலைகள் பறக்க வாய்ப்பிருக்கிறது. காலை 9-10 மணியளவில் வாழைக் குளியல் எடுக்கலாம். பெண்கள் 10 நிமிடங்களும், ஆண்கள் அரை மணி நேரமும் செய்யலாம். வாழை இலைகள் மேல் சூரியக் கதிர்கள் பட நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும். எதிர்ப்பு சக்தி உண்டாகும். கழிவுகள் தேங்கிய கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். மருத்துவரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ , அடிக்கடியோ செய்துகொள்ளலாம்.


 ஓம் நமசிவாய




Tags :

Kuliyal , panjabotham , panjapoothakuliyal , 5 kuliyal , kulial

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top