சித்ரா பௌர்ணமி

0

சித்ரா பௌர்ணமி குறித்து நமது ஓம் நமசிவாய குழுவில் சிறு பதிவு :


சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி கூடிய நாளே சித்ரா பௌர்ணமி. பௌர்ணமி தினங்களிலேயே, இந்த சித்ரா பௌர்ணமிக்குத்தான் சிறப்பு அதிகம். சித்ரா பௌர்ணமி தினம் எமதர்மராஜன் சபையில் நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும் கணக்கரான, சித்ரகுப்தன் அவதரித்த நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது ஐதீகம்.

சித்ரா பௌர்ணமி நாளில் சித்ரகுப்தரை வழிபடுவதன் மூலம் நம் பாவ கணக்குகளை சிறிது குறைத்துக் கொள்ளலாம்.

பாவங்களை நீக்கும் சித்ரா பௌர்ணமி :

ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் நமது பாவ புண்ணிய கணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. எனவே, சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

பௌர்ணமி பூஜை பொதுவாக, எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணப் பேறு கிட்டவும், திருமணமான பெண்களுக்கு மழலைச் செல்வம் கிட்டவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், பௌர்ணமி பூஜை சிறப்பு வாய்ந்ததாகும். எல்லா பௌர்ணமி பூஜையிலும் சிறந்து விளங்குவது சித்ரா பௌர்ணமி பூஜையாகும்.

சித்ரகுப்தனை வேண்டிக் கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்ரகுப்தனைப் போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகின்றது.

சித்ரா பௌர்ணமியன்று மாலையில் ஒருமுறை ஸ்நானம் செய்து, இறைவனுக்கு படையல் செய்து பூஜித்து, சித்ரகுப்தனை மனதில் எண்ணி, 'நாங்கள் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்" என்று பிரார்த்திப்பர்.

சித்ரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.

சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து ஒரு பேப்பரில் 'சித்ரகுப்தன் படியளப்பு" என்று எழுதி வைக்க வேண்டும்.

 திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணாமலையாரின் அருளுடன் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.

சித்ரகுப்தருக்கான கோயில்கள்

தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சித்ரகுப்தர், யமன், பிரம்மனுடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய
Tags :

chitra , powrnami 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top