ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எமதர்ம ராஜாவிற்காக அமைக்கப்பட்ட ஆலயம் பற்றிய சிறு பதிவுகள் :
உலகிலேயே எமதர்மனை மூலவராகக் கொண்ட கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் 1000 ஆண்டுகள் புகழ்பெற்றது.
எமனால் தவம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் ஒரு வேகத்தில் எமதர்மனை அழித்தாராம். பின் தேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் எமதர்மனை உயிர்த்தெழச் செய்தாராம். அப்போது எமன் தனக்கு அளித்துள்ள அழிக்கும் பணியை செய்ய அனுமதிக்குமாறு வேண்டியதால், அதே இடத்தில் எமனுக்கு ஒரு தலம் அமைத்துக் கொடுத்தாராம். இதனால் இத்தலம் உருவாகியது.
இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் ஆயுள் நீளும் என்கிறார்கள். எமதர்மர் நீதிக்கு தர்மர் எனவே திருடுபோனவர்கள், ஏமாற்றப்பட்டவர்களெல்லாம் இங்குவந்து வேண்டிக்கொள்கின்றனர்.
தங்கள் கோரிக்கையை தாளில் எழுதி, அதை எமதர்மன் சன்னதியில் வைத்து வழிபட்டு, சூலத்தில் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைத்த சில நாள்களில் அது நிறைவேறிவிடும் ஆச்சர்யங்களும் இங்கு நிகழ்கின்றன.
சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இந்த கோயிலில் ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் எமதர்ம ராஜாவின் சிலை முறுக்கிய மீசையுடன், எருமை மீது அமர்ந்து கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை போன்றவற்றை வைத்துள்ளார். இவருக்கு கீழே சித்திரகுப்தரும், எமதூதரும் இருக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்ட கோயில் குளத்தில் யாரும் நீராடுவதில்லை.