பஞ்சகவ்யம் மற்றும் பஞ்சகவ்ய விளக்கு

0
பஞ்சகவ்யம் பற்றியும், பஞ்சகவ்ய விளக்கு எப்படி செய்வது என்பது பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :


பஞ்சகவ்யம் = பஞ்ச + கவ்யம்.
பஞ்ச - என்றால் ஐந்து என்று பொருள்படும். 
கவ்யம் - என்றால் பசுவிடமிருந்து பொருள்படும் ஏதேனும் ஒரு பொருள். 

பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்கள் என்பதைத்தான் பஞ்சகவ்யம் என்று கூறிப் பிடுகின்றோம்.

பசும்பாலில் சந்திரனும்,
பசுந்தயிரில் வாயு பகவானும், 
கோமியத்தில் வருண பகவானும், பசுஞ்சாணத்தில் அக்னி தேவனும், 
பசு நெய்யில் சூரியபகவானும் 
வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் தான் இந்துக்களின் பல்வேறு சடங்குகளிலும், பூஜைகளிலும், ஆலயங்களிலும் இதற்கென தனித்துவமான இடம் இருக்கிறது. 

பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது.  
அவை பசுஞ்சாணம், பசுவின் கோமியம், பசும்பால், பசுந்தயிர், பசுநெய்.

இவை ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது. 

தஞ்சை நூலகத்தில் பழைய ஓலைச் சுவடி ஒன்றில் பஞ்சகவ்யம் பற்றி கூறப்பட்டுள்ளது. பஞ்சகவ்யம் உட்கொள்வோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும். பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. 

பசும்பால்: 5 பங்கு 
பசுந்தயிர்: 3 பங்கு 
பசு நெய்: 2 பங்கு 
கோமியம்: 1 பங்கு 
பசுஞ்சாணம்: அரைப்பங்கு 

இத்துடன் தர்ப்பைப்புல் ஊறிய நீரும் கலந்து உடனே உட்கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதால் நம் உடல் தூய்மை அடைகிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும் இவை ஐந்தையும் ஒரே பசுவிடமிருந்து பெறுவதை காட்டிலும் வெவ்வேறு நிற பசுக்களிடமிருந்து பெறுவது நலம் என்று விவேக சிந்தாமணி என்னும் நூல் குறிப்பிடுகிறது.

அவை: 

வெள்ளை பசு – சாணம் 
பொன்னிற பசு – பால் 
செந்நிற பசு – கோமியம் 
நீல பசு – தயிர் 
கருநிற பசு – நெய் 

பஞ்சகவ்ய விளக்கு எப்படி செய்வது ?

பசுஞ்சாணம் சிறிது எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பசும்பால், பசுந்தயிர், பசு நெய், மற்றும் கோமியம் இந்த நான்கையும் கலந்து நன்கு பிசைந்து உருட்டிக் கொள்ள வேண்டும். அதை அகல் போல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்கவும். பின் அதனுள் சாதாரணமான மண் அகல் விளக்கை வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். 

இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும் போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும். 

கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது பல மடங்கு நற்பலன்கள் நமக்கு உண்டாகும். இந்த தீபம் ஏற்றுவதால் ஹோமம் செய்வதற்கு நிகரான பலன்களை நம்மால் பெற முடியும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top