நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காலத்தை மாற்றியமைக்கும் காலதேவி அம்மன் ஆலயம் பற்றிய பதிவுகள் :
27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள், 12 ராசிகள் உள்ளிட்டவற்றை தன்னுள் அடக்கி இருக்கும் 'காலதேவி அம்மன்' கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்ற பழமொழிக்கு இணங்க நேரத்திற்கு மதிப்பு கொடுப்பதும், அதன் மதிப்பையும் , பெருமையையும் உணர்ந்து, வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்தையும் அதில் நல்லது, கெட்டது என காலக்கணக்கை வைத்து, விஞ்ஞானம் முளைக்கும் முன்னரே காலம் குறித்து வழிகாட்டி உள்ளனர்.
விஞ்ஞானம் எவ்வளவு தான் உயர்ந்தாலும், ஒருவரின் நேரத்தை அதனால் கணிக்க முடியாது. இப்படி இருக்க ஒருவரின் நேரத்தை கணிக்கக் கூடிய ஒரு கோயில் இருக்கிறது.
கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என எழுதப்பட்டிருக்கும் அதாவது நேரம் தான் உலகம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
புராணங்களில் வரக்கூடிய காலராத்திரியை தான், இந்த கோயிலில் காலதேவியாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த கால தேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. பஞ்சபூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், காத்தல், அழித்தல், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய சக்தியாக விளங்குபவர் காலதேவி.
நேரத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய கால தேவிக்கு ஒருவரின் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி உண்டு. இது தான் இந்த கோயிலின் மிகப்பெரிய சக்தியாகவும், தத்துவமாகவும் விளங்குகிறது.
மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறந்திருக்கும் அதிசய கோயிலாக உள்ளது.
இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பெளர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள், தனக்கு இதைக் கொடு, அதைகோடு என வேண்டுவதற்கு பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதுமானது.
அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பெளர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை.
இக்கோயில் மதுரை மாவட்டத்தில் ராஜபாளையம் என்ற ஊருக்கு செல்லும் வழியில் சுப்பலாபுரம் என்ற கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது.