பழந்தமிழரின் காலம் தொட்டே திருவிழாவானது நிறைய மாதங்களில் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் சிறப்பானதொரு திருவிழா மாதமாக இருப்பது தை மாதம் ஆகும்.
தொன்றுதொட்டு தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்ற பழமொழி மற்றும் முதுமொழியானது நமது வாழ்வில் கலந்தே உள்ளது. அப்படி என்ன தான் சிறப்பு உள்ளது? என்பதை அறியாமலே கூறுவோர் பலருண்டு.
உத்தராயணம் என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு என்றும், அயனம் என்றால் வழி என்றும் பொருள்.
கண்ணிற்கு புலப்படும் ஒரே இறை சக்தியாக விளங்குபவர் சூரியன் மட்டுமே. அப்படிப்பட்ட சூரியன் தனது பயணத்தை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமே உத்தராயணம் ஆகும்.
தை மாதத்தில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசியில் நுழைந்து 29 நாட்கள், 27 நிமிடங்கள், 16 வினாடிகள் வரை பயணிப்பார்.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாதத்திற்கு உத்தராயணம் நீடிக்கும். இக்காலமானது ஞானத்தை வழங்கும் காலமாக கருதப்படுகிறது. இதுவே தேவர்களின் காலைப் பொழுது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
வேத, இதிகாச, புராணங்களில் இந்த தை மாதமானது சிறப்பானதொரு மாதமாக சொல்லப்பட்டுள்ளது.
மகாபாரதப் போரில் பீஷ்மர் அர்சுனனின் அம்புகளால் வீழ்ந்தும் உயிர் துறக்கவில்லை. அம்பு படுக்கையில் கிடந்தார்.
தான் விரும்பிய தருவாயில் மரணம் வேண்டும் என்ற வரத்தைப் பெற்ற அவர் “தை முதல் நாள்” அதாவது உத்தராயணம் துவங்கும் வரை காத்திருந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
உத்தராயணத்தில் தான் ஞானத்தின் வழி பிறக்கும். எனவே அப்பொழுது இறப்பவர்களுக்கு மறுப்பிறப்பு இருக்காது.
இந்த யுகத்திலும் இராமலிங்க வள்ளலார் போன்ற எண்ணற்ற சித்த புருஷர்கள் உத்தராயண காலத்தில் முக்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே புராண காலத்தில் இருந்தே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்படுகிறது என்று அறிகிறோம்.
ஆடி மாதம் துவங்கி ஆறு மாதத்திற்கு நெற்பயிர் வளர ஆரம்பித்து தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.
இதில் ஆறு மாதம் விவசாயிகள் தான்பட்ட கடன், துன்பம், கவலைகள் எல்லாம் தீர்ந்து அறுவடை செய்து பணம் ஈட்டி துன்பங்கள் எல்லாம் தீர வழி பிறக்கும்.
தை மாதம் சுபகாரியங்கள் துவங்க வழி பிறக்கும் என்பதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்.
தட்சிணாயன காலத்தில் பூமிக்கு வரும் முன்னோர்கள், நான்கு மாதங்கள் இங்கு இருந்து தங்களின் சந்ததியினரை ஆசிர்வதிப்பார்கள்.
மீண்டும் சூரியனின் துணைக் கொண்டு பித்ரு லோகம் செல்ல பாதை பெற்று விடைப்பெறுகின்றனர் என்று நம்பப்படுகிறது. எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்.