பாடும் பாடல் ஒலிச்சுவையும் அவளே .. நம்மை இங்கு பாடவைத்தவளும் அவளே.. கற்கும் பாடம் சொல்லும் நல்லறிவும் அவளே..
மகாகவி ஶ்ரீ காளிதாசனுக்கு கவிபாடும் திறன் தந்தவள் இதே க்ஷியாமளா தேவியே .. அம்பிகையினுடைய பல்வேறு விதமான வர்ணரூபங்களில் சாம்பல்பச்சை வண்ணமுடையவளே ஶ்ரீ ச்யாமளா தேவீ , இதயகமலமாகிய அநாகதத்தில் எழுந்தருளியிருக்கும் ராகினி என்ற யோகினியின் திருமேனி சியாமள வர்ணமுடையது...
இசைவாணியாகவும், வாக் தேவதையாகவும் , கலைகளின் தேவதையாகவும், அரச போக வாழ்வை அளிக்கும் ஞானப்பூங்கோதை ..
தச மஹா வித்யையில் ஒன்பதாவது ஸ்வருபமாக வருகின்ற ராஜமாதங்கி தேவியை தாந்திரீக பூஜைகள் நீலசரஸ்வதீயாக பாவித்து நிகழ்த்தபடும் ..
நான்முக நாயகி ஶ்ரீ வித்யா சரஸ்வதியை விடவும் பலநூறு மடங்கு அதிசயங்கள் , பரமரகசியங்கள் புதைந்து கிடக்கும் ஶ்ரீ நீலசரஸ்வதி ரூபம் .. இவளுடைய உக்ரத்திற்கு எல்லையென்று ஒன்று கிடையவே கிடையாது .. சாந்தி கோலத்தில் சகல உத்தம ஆயுதங்கள் தரிக்க தரிசனம் தருகின்ற இதே தேவியே , யுத்த களத்தில் ரத்த வாசனை பொங்க மண்டையோடு மாலை தரித்து அசுரகூட்டங்கள் ரத்தக்கறை பட்ட ருத்ரவீணையிசையை மீட்டி கேயரதத்தை செலுத்துவாள்.. இவளின் உபாசனை மிகவும் உத்தமமான ஆத்மஞானம் தரவல்லது ஆகும் ..
சியாமளாவின் அரசவை :
அங்க தேவதைகளாக,
1. ஹசந்தி ஷ்யாமளா,
2. சுக ஷ்யாமளா,
3. சாரிகா ஷ்யாமளா,
4. வீணா ஷ்யாமளா,
5. வேணு ஷ்யாமளா,
6. லகுஷ்யாமளா என அறுவரும் உபாங்க தேவியராக
லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என மூவரும் சேவித்து வணங்க இசையொலிக்கும் கேயசக்கரத்தில் அமர்ந்து அரசாட்சி புரிகின்றாள்..
பண்டவதத்தில் ஶ்ரீலலிதையால் பெரிதும் போற்றப்படும் நாயகி , ஶ்ரீ இராஜராஜேஸ்வரிக்கே மந்திரியாக இருந்து ஆலோசனை வழங்குவாள். மந்திரிணியை கேட்காது ஶ்ரீபுரநாயகி செயலாற்றுவதில்லை.
காதம்பரி, வாக்விலாஸினி என்றெல்லாம் துதிக்கப்படுகிற இவளை ஆதிசங்கரர் தொடங்கி சங்கீத மும்மூர்த்திகள் வரை பாடிப் பணிந்து பல சிறப்புகளைப் பெற்று இருக்கின்றனர்.
பதினாறும் தருபவள் :
மாதங்கியாக கோவில் கொண்டுள்ள தலமெங்கிலும் ராஜ மரியாதைகளுடன் , சோடஷ உபச்சாரங்களுக்கு குறைவிருக்காது.
இவளுடைய சோடஷ திருநாமங்கள் சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதாமாதா ஆகியவையாகும்.
வடிவமே ஞானம் நல்கும் :
இவளை கண்ட மாத்திரத்தில் ஞானம் அடைந்தோர் பலர். கருணாகடாக்ஷி இவளின் திருக்கரத்தில் உள்ள சம்பாகதிர், உலகியல் இன்பத்தையும் தாமரை கலை உள்ளத்தையும், பாசம் ஈர்ப்பு சக்தியையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன.
நன்றி - ஸ்ரீபாலா சத்சங்கம்