ஞானத்திருமகள் சரஸ்வதி அவதாரம் .. அவளுடைய மூலரூபம் நீலசரஸ்வதி.
மிக சில நூற்றாண்டுக்கு முன் வரையில் நீலாயதாக்ஷியம்மன் கோவில் அர்த்தஜாம பூஜைக்கு பின் , அந்த காலக்கட்டத்தில் ஆற்றைக் கடந்துதான் அர்ச்சகர்கள் கும்மிருட்டில் அக்ரஹாரத்திற்கு ஆயத்தமாவார்களாம் .. அப்போது நடையடைப்பின் பிறகு யாரும் பின்புறத்தை நோட்டமிடாமல் நடந்து கொண்டு வருவார்களாம் .. கோவில் வாசலில் தொடங்கிய அம்மனின் பாதசலங்கை எனும் கிங்கிணி ஓசை அவர்களை பின்தொடர ஆரம்பித்து , ஆற்றை கடந்து அக்ரஹாரத்தில் நுழையும் வரையிலும் நிற்காமல் கேட்குமாம்...
அவர்கள் வீடுகளை அடைந்தவுடன் வடக்கே நீலாயதாக்ஷி சந்நிதி நோக்கி சாஷ்டாங்கமாக மண்வீழ்ந்து நமஸ்கரித்து , "அம்மா நாங்க பத்ரமா ஆத்துக்கு வந்துட்டோம்டீ , நீ நிம்மதியா போய்ட்டு வாடிமா " , என்று சொல்வதுதான் தாமதம் அந்த சலங்கை கொலுசு சப்தம் வந்த வழியாகவே விறுவிறுவென சென்று மறைந்திடுமாம்....
அவளுடைய காருண்யத்திற்கு நன்றி சொல்லவியலாத அக்ரஹாரம் வாழ்பவர்கள் அனுதினமும் அவளுடைய பூஜைகளை நியமங்களுடன் வீட்டிலேயே நிகழ்த்துகின்றனர்..
இக்காலத்தில் கூட தாயின் மீதுள்ள கசிந்துருகச்செய்யும் காதலால் , நாகை க்ஷேத்திரவாசிகள் அனைவருடைய இல்லத்தில் நீலாவே பேசும் விக்ரகமாக நித்யபூஜை காண்கிறாள்...
வகிட்டில் வைரரத்தினம்
அவள் கோவிலுக்கு பொன்னும் உலோகம் சேர்த்து உற்சவ ரூபத்தினவளை சிலைரூபத்தில் வார்த்தெடுக்கும் போது , பக்தர் ஒருவர் மூக்குத்தி செய்ய கொடுத்த வைரக்கல்லை தலைப்பாக முடிப்பில் வைத்திருந்த ஸ்தபதி , காய்ச்சி வைத்திருக்கும் உலோக பொன்கூழை அச்சில் ஊற்றியபோது வைரம் தவறி சிலையினுள் விழுந்து விட , கவலையுற்று போனார்... சிலையை குளிரச்செய்து , எடுத்த பின்னர் கண்டதுதான் அதிசயம்... உள்ளே விழுந்த வைரம் சரியாக நெற்றி வகிட்டு திலகம் போல் சௌந்தர்யமாக மின்னியது... ஏழேழ் உலக சுமங்கலிகளுக்கும் தீர்க்க மாங்கல்ய பலமளிக்கும் அன்னை ஶ்ரீ பரமேஸ்வரி வைரத்திலேயே வகிட்டு திலகம் தரிப்பதில் ஆச்சரியம் என்ன !!!
நின்று போன பூஜைகள்
சிவபெருமானைவிடவும் பல்வேறு விதமாக தனித்த பெருமைகொண்ட நீலாபுகழ் திக்கெட்டும் பரவியது .. சிவனுக்கு இணையாக தனி கைலாய பர்வத இராவண வாகனம் நாகையில் மட்டுமே ..செல்வ பெண்ணாக வளர்ந்த இவளுக்கு ஒன்றல்ல இரண்டல்ல நூற்றியெட்டு விலையுயர்ந்த மரகதகிளிகள் கொண்ட பல்லாக்கு தண்டியில் உற்சவம் இருந்திருக்கிறது... அளவிலா மக்கள் பாசத்திற்கும் , அள்ளமுடியா செல்வத்திற்கும் அதிபதியாவாள்...
அம்பாள் கோவிலில் கூட்டம் அலைமோதும்... உபயகாரியங்களுக்கு அடித்து கொள்வார்கள்...கூறவியலாத
சிலப்பல மனஸ்தாபங்கள் ஒருசிலருக்கு இருந்திருக்கலாம் ....!!!
ஶ்ரீபராபட்டாரிகை ஶ்ரீபுரவாசினி ராஜ ராஜேஸ்வரியாக லலிதா மகா த்ரிபுரசுந்தரியாக,கரும்பில் பிறந்த மாதங்கியாக, வீணாகானமிசைக்கும் சியாமளாவாக நின்று பேசிய தெய்வமாக விளங்கிய நீலாயதாக்ஷி சந்நிதியில் சிவ சக்தி பேதம் கற்பிக்கும் சில கல்நெஞ்சத்தினரால் , ஶ்ரீ சக்ரம் பெயர்த்தெடுக்கப்பட்டு , அம்பிகையின் சியாமளா பத்தாதி பூஜையும் , நவாவரணமும் நிறுத்தப்பட்டது .. அவளின் உக்கிரம் அறியாது செய்தவர்களையும் பெற்றெடுத்த தாயாக காருண்ய கண்களாலேயே தேவி பார்க்கின்றாள்...
நன்றி - ஸ்ரீபாலா சத்சங்கம்