லலிதா பரமேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு வணங்கப்படுபவளான அம்பிகை ஸ்ரீசக்ர வழிபாட்டின் நாயகியாவாள். இவளின் இருப்பிடம் வானுலகில் ஸ்ரீநகரம்; பூவுலகில் ஸ்ரீசக்ரம். திரிகோணத்தின் மூன்று மூலைகளிலும் காமேஸ்வரி, வஜ்ரேஸ்வரி, பகமாலினி எனும் தேவிகள் வீற்றிருக்க அதன் நடுவில் பிந்து எனப்படும் மையத்தில் திரிபுரசுந்தரி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்ரஹித்தல் என்ற ஐந்தொழில்களையும் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக இந்த உலகை பரிபாலனம் செய்து கொண்டு திருவருள்பாலிக்கிறாள். இவள் அமர்ந்திருக்கும் ரத்னமயமான கட்டிலின் கால்களாக ருத்ரன், ஈசன், நான்முகன், திருமால் எனும் நால்வரும் துலங்க சதாசிவனே அந்த மஞ்சத்தின் பலகையாக இருக்க அவன் மேல் அமர்ந்து அருளும் திருக்கோலம் கொண்டவள் இவள். பரப்ரம்ம மஹிஷியான இவளே அன்பின் சக்தியாகவும் கொண்டாடப்படுகிறாள்.
இந்த அம்பிகை ஸ்ரீநகரத்தில் சிந்தாமணி கிரகத்தில் மட்டுமா இருக்கிறாள்?’’
இந்த கேள்வி நமக்கு மட்டுமில்லை. அபிராமி பட்டருக்கும் வந்தது.
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்
மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சகமோ, என் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ, பூரணாசல மங்கலையே?
எனும் தன் அபிராமி அந்தாதி பாடலில் கேட்கிறார்.
‘‘தாயே! உன் உறைவிடம் எது? இறைவனது வாம பாகம் மட்டும்தானா? வேதத்தின் அடியா? வேதாந்தங்களா? அல்லது அமிர்தத்துடன் பிறந்த அந்த பூரணச் சந்திரனா? பின் ஏன் உன்னை சந்திர மண்டலத்தில் தியானிக்க வேண்டும் என்கின்றனர்? நீ இருக்கும் இடம் தாமரை மலரா அல்லது அடியேனின் இதயக் கமலமா? அமுதம் நிறைந்த கடலா? மணித்வீப மத்யே என்கின்றார்களே! இப்படி பலவிதமாக சொன்னால் என் போன்ற எளியவர்களுக்கு எப்படிப் புரியும்? நீயே சொல்லம்மா’’ என்கிறார்.
அவள் இருப்பிடம் எதுவாக இருந்தால் என்ன? அவளை சதாசர்வகாலமும் நம் மனதில் இருந்தி தியானித்தால் அவள் நம் மனதில் வந்து நிச்சயம் அமர்ந்து விடுவாள். அதைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம், ‘பக்தமானஸ ஹம்ஸிகா’ - பக்தர்கள் மனதில் நீந்தும் அன்னப்பறவை என்று குறிப்பிடுகிறது.