சகல திருஷ்டிகளையும் நீக்கும் வேலூர் ஜலகண்டேஸ்வரர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகல திருஷ்டிகளையும் நீக்கும் வேலூர் ஜலகண்டேஸ்வரர் பற்றிய பதிவுகள் :

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்.

தல சிறப்பு :

இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

பிரம்மா, திருமால் இருவரின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் அருள்பாலிக்கும் தலம்.

அன்று மாலை ராஜகோபுரத்தில் தீபமேற்றி 
மும்மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கும்.

கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று (திங்கள்) சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கும்.

மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம்.

இங்குள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.

அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில், அணையா நவசக்தி ஜோதி தீபம் இருக்கிறது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள்.

சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வெங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார். புரட்டாசி சனியன்று இவருக்கு மகாபிஷேகம் நடக்கும்.

மன்னர் பொம்மி, சிவனுக்கு கோவில் எழுப்பிய போது சுற்றிலும் ஒரு பிரம்மாண்டமான கோட்டையைக் கட்டினார். கோட்டையை சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது.

பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. 

வெற்றி தரும் வௌ்ளிக் கிழமை தீபம்

கோயிலில் உள்ள நவசக்தி தீபத்தை வெள்ளிக்கிழமை தரிசித்தால் வாழ்வில் என்றென்றும் வெற்றி நிலைக்கும்.

பல்லி தோஷ பரிகாரம்:

சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

ராகு, கேதுவால் ஏற்படும் நாகதோஷம், பல்லி தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வழிபடுகின்றனர்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது எட்டு சப்பரங்களில் 63 நாயன்மார்கள் வீதியுலா செல்வது கண்கொள்ளா காட்சியாகும். இவர்களுடன் ஜலகண்டேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி செல்வார்.

செல்வ விநாயகர், ஆதிசங்கரர் சன்னதிகளும் உள்ளன. 

வெற்றி தரும் தீபம்:

அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில் 'அணையா நவசக்தி ஜோதி தீபம்' இருக்கிறது. அம்பிகை தீப வடிவில் நவசக்திகளாக அருள்பாலிப்பதாக ஐதீகம். வெள்ளிக்கிழமையில் இந்த விளக்கிற்கு மேள தாளத்துடன் நைவேத்யம் படைத்து பூஜை நடத்தப்படும். இதை தரிசித்தால் வாழ்வில் வெற்றி நிலைக்கும்.

முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது. பக்தர்கள் இங்குள்ள நந்தியின் முன் தங்கள் பிரார்த்தனை நிறைவேற தீபம் ஏற்றாத அகல்விளக்கு வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.

காசி யாத்திரை பலன்:

பிரகாரத்தில் கங்கை நதி கிணறு வடிவில் இருக்கிறது. இதன் அருகில் 'கங்கா பாலாறு ஈஸ்வரர்' சன்னதி உள்ளது. இந்த லிங்கம் இக்கிணற்றில் இருந்து கிடைத்தது. கூம்பு வடிவில் உள்ள இந்த லிங்கத்தின் பின்புறம் பைரவர் வீற்றிருக்கிறார். காசி போலவே சிவன், கங்கை தீர்த்தம், பைரவர் என மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிப்பது சிறப்பு. இதை வழிபடுவோருக்கு காசியாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

தட்சிணாமூர்த்தி நான்கு சீடர்களுடன் உற்சவராக இருக்கிறார்.

 சனீஸ்வரர் மனைவி ஜேஷ்டாதேவி, மகன் மாந்தியுடன் உற்சவ மூர்த்தியாக இங்கிருக்கிறார்.

வெண்ணெய்த் தாழி கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர், நரசிம்மர், கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், யோகாசனம் செய்யும் மகரிஷி, மேல் விதானம் தாங்கும் கிளிகள் என இங்குள்ள சிற்பங்கள் கலையம்சம் நிறைந்ததாக உள்ளன. இதன் அழகில் மயங்கிய ஆங்கிலேயத் தளபதி ஒருவர் தூண்களோடு பெயர்த்து செல்ல திட்டமிட்டார். இதற்காக கப்பலை வரவழைத்த போது அது விபத்தில் சிக்கியதால் எண்ணத்தைக் கைவிட்டார். 

தல வரலாறு :

அக்காலத்தில் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டார். காலப்போக்கில், லிங்கம் இருந்த பகுதியானது வேலமரக் காடாக மாறியது.

லிங்கத்தையும் புற்று மூடிவிட்டது. அதன்பிறகு பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டு வந்தார், அவரது கனவில் சிவன் தோன்றி, தான் புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கமாக உள்ளதை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் சிவனின் கட்டளைக்கு உட்பட்டு கோவில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் கூறப்படுகிறது. எனவே இங்குள்ள சிவனுக்கு 'ஜலகண்டேஸ்வரர்" என்று பெயர் ஏற்பட்டது.

பிரார்த்தனை :

 நீண்ட ஆயுளுடன் வாழவும். திருமணதடை நீங்கவும், திருஷ்டிகள் விலகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top