கைலாயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் நந்தி பகவான்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கைலாயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் நந்தி பகவானின் பற்றிய பதிவுகள் :
 
சிவபெருமானை வழிபட நந்தி பகவானுடைய அனுமதி தேவை என்பது நியதி. அன்னை பார்வதி தேவியே பெருமானைக் காண நந்தி பகவானிடம் அனுமதி கேட்டு தான் செல்வார் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது.

கைலாயத்தில் காவலாக இருக்கும் பதவியை பெற்றுள்ள நந்தி பகவான் எல்லா சிவன் கோவில்களிலும் காணப்படுகிறார். சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் நந்தி பகவானையும் வழிபட்டு வர வேண்டும். அப்பொழுது தான் அந்த வழிபாடானது முழுமையாக பூர்த்தி அடையும். 

நந்தி பகவானிடம் நம்முடைய வேண்டுதலை வைத்ததும் அது ஈசனை உடனே சென்றடையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு எப்படி கிளியோ! அதே போல சிவபெருமானுக்கும் இந்த நந்தி பகவான் தூதுவராக இருக்கிறார். 

மீனாட்சி அம்மனிடம் வேண்டுவதை விட, அந்த கிளியிடம் நாம் வேண்டிக் கொண்டால் கிளி மறக்காமல் மீனாட்சி அம்மனின் காதுகளுக்கு நம் வேண்டுதல்களை கொண்டு சென்று விடுமாம். அடிக்கடி சொல்லி ஞாபகப்படுத்தவும் செய்யுமாம். 

அதே போல கைலாய காவல் தெய்வமாக விளங்கும் நந்திகேச பெருமாளை கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உங்களுடைய வேண்டுதல்களை சொன்னால் உடனே அது சிவபெருமானை அடைந்து நம் வேண்டுதல் பலிக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதனால் தான் பிரதோஷ காலங்களில் நந்தி பகவான் வழிபாடும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

மந்திரம்:

நந்திகேச மகாபாஹ,
சிவத்யான பாராயணா,
உமாசங்கர சேவோர்த்தம்,
அனுக்யாம் தாதுமர்ஹசி
 
விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும் நந்தி பகவானிடம் வேண்டிக் கொள்வது உத்தமம். காளையின் அம்சமாக இருக்கும் நந்தி பகவானுக்கு நாம் அரிசியின் கழிவு பொருளாக இருக்கும் வைக்கோலை உணவாக இடுகிறோம். காளை வைக்கோலை சாப்பிட்டு, நமக்கு சாணத்தை உரமாக கொடுக்கிறது. விவசாயத்தின் முதுகெலும்பாக செயல்படும் இந்த காளையை போற்றும் விதமாக நந்தி பகவானுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். 

உணவினைத் தயாரிக்க உதவும் இந்த நந்தி பகவானுக்கு நாம் ஒவ்வொரு சோமவாரத்திலும் அதாவது திங்கட் கிழமை அன்றும் நன்றி செலுத்தும் விதமாக காளைகளுக்கு நம்மால் இயன்ற தானத்தை வழங்கலாம். பசு, காளை போன்ற விலங்குகளுக்கு நாம் இயன்ற பொழுது தான, தர்மங்களை செய்து வந்தால் நம் சந்ததியினர் வறுமை இன்றி வாழ்வார்கள்.

நந்தி பகவான் கைலாயத்தில் எப்பொழுதும் சிவபெருமானுக்கு தன்னுடைய மூச்சுக் காற்றால் விசிறியவாறு சிவத்தொண்டு புரிந்து வருகிறார். எனவே அவரிடம் நமது வேண்டுதல்களையும், சமூகத்தின் மீதான அக்கறையுள்ள வேண்டுதல்களையும் வைத்து வழிபட வேண்டும். 

இவ்வாறு நாம் வழிபடுவதன் மூலம் நந்தி பகவான் அருளும், சிவபெருமானுடைய ஆசியும் கிடைக்கப் பெறுவோம். எனவே இனி சிவன் கோவில்களுக்கு செல்பவர்கள் நந்தி பகவானிடம் வேண்டுதலைச் சொல்ல மறந்து விட வேண்டாம். வீட்டில் நந்தியுடன் கூடிய சிவ குடும்பம் படத்தை வைத்திருப்பது குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுத்து, மிகுந்த நன்மைகளை கொடுக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top