பிள்ளையார் வழிபாடு மிகவும் சுலபமானது. மஞ்சள்பொடி அல்லது பசுஞ்சாணம் இதில் எதை வைத்தாலும் பிள்ளையார் ஆவாஹணம் ஆகிவிடுவார். அவருடைய வழிபாடும் மிக எளிமையானது. சின்னச் சின்ன வழிபாடுகளிலேயே மகிழ்ந்து, நாம் கேட்கும் வரங்களை உடனுக்குடன் கொடுத்துவிடுவார்.
நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுவதும் பிள்ளையாரை வழிபடும்போது பக்தர்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய நியதிகள் ஆகும். இப்படி விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
முன்பொரு சமயம், கஜமுகாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்தான். அவனது தவ வலிமையைக்கண்டு சக்திமிக்க பல வரங்களை அவர் வழங்கினார். இத்தனை வரங்களைப் பெற்றதும் கஜமுகாசுரன் தனது சேஷ்டைகளைத் தொடங்கிவிட்டான். பலவிதத்திலும் மக்களுக்கும், தேவர்களுக்கும் கணக்கிலடங்காத துன்பங்களைக் கொடுத்தான். ஒவ்வொரு நாளும், தேவர்களை சின்னக் குழந்தைகளைப் போல பாவித்து, அவர்களை காலை, மதியம், மாலை, இரவு எனப் பாராமல் தொடர்ந்து 1,008 தோப்புக்கரணங்கள் போடச்சொன்னான்.
இதனால் தேவர்கள் உலக இயக்கத்துக்கு தங்களது கடமைகளை ஆற்றமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதை சிவபெருமானிடம் சொல்லி வருந்தினர். உலகையெல்லாம் காத்து ரட்சிக்கும் இறைவன் கஜமுகாசுரனை அழிப்பதற்கு விநாயகரை அனுப்பி வைத்தார்.
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் நடைபெற்ற பெரும் போரில் அவனது படை முற்றிலும் அழிந்தது. ஆனால், அவனை மட்டும் அழிக்க முடியவில்லை. எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனும் வரத்தை வாங்கி இருந்ததால், அவனை விநாயகரால் அழிக்க முடியவில்லை. உடனே, விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து சிவ மந்திரத்தைச் சொல்லி வீசவே கஜமுகாசுரனின் அசுர உருவம் அழிந்து பெருச்சாளி வடிவமாகி விநாயகரைப் பணிந்து நின்றான்.
விநாயகரும், அவனை மன்னித்து தனது வாகனமாக்கிக் கொண்டார். நிலைமை கட்டுக்குள் வந்து சகஜமானதும், தேவர்கள் விநாயகப் பெருமானை வணங்கி மும்முறை நெற்றிப் பொட்டில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டனர்.
இதைப் போலவே இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காகம் உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதும் விரிந்து பரந்து ஓடியதால் காவிரி என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது.
கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்தியர் திரும்பிப் பார்த்தார். அதைக்காணவில்லை. காகம் நின்ற இடத்தில் ஒரு சிறுவன் நின்றிருந்தான். செய்வதையும் செய்துவிட்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன்தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் கொட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். கொட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் கொட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். இவ்விதமாகத்தான் விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் ஒரு அம்சமானது.
பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதன் மூலமும் நம் உடலில் இருந்து குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. நமது நாடி நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது. இந்த நிகழ்வு வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
தோப்புக்கரணம் போடும்போது வலது காதுமடலின் கீழ்ப்பகுதியை இடது கையாலும், இடது காது மடலின் கீழ்ப்பகுதியை வலதுகையாலும் அழுத்திப்பிடிக்க வேண்டும். இடதுகை உள்ளேயும் வலதுகை வெளியேயும் இருக்குமாறு தோப்புக்கரணம் போட வேண்டும்.
நமது வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால் கைகளை நாம் பிடிக்கும்போது சரியான அளவில் அவை தூண்டப்படுகின்றன.
காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால் நமது ஞாபகசக்தி அதிகரிப்பதாக இன்றைய அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது.
தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து புதுவித சக்தியும் உற்சாகமும் ஏற்படுகின்றது. படிப்பு, எழுத்து, கணிதம் போன்றவற்றில் கவனம் அதிகமாகும்.
இறைவழிபாட்டுடன், சிறந்த உடற்பயிற்சியாகவும் இருப்பதுடன் ஆத்ம சங்கல்பத்தை, லட்சியத்தில் வைராக்கியத்தை ஏற்படுத்துகின்றது.