கோபூஜை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோபூஜை பற்றிய பதிவுகள் :

கோமாதா பூஜை செய்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை! கோ பூஜை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு. 

இதனால் கோ பூஜை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது எளிமையான முறையில் இவ்வாறு செய்ய, பாவங்கள் நீங்கி தன, தான்யங்கள் சேர்வதற்கு நல்ல பரிகாரமாக அமையும்.

கோமாதா என்பது பசுவினை குறிக்கிறது. பசுவிற்கு தீங்கிழைப்பவர்களை கடவுள் ஒரு போதும் மன்னிப்பது இல்லை. பசுவில் அனைத்து தெய்வங்களின் அம்சமும் நிறைந்து உள்ளது. எனவே பசு மிக விசேஷமான ஒரு விலங்கினமாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. பசுவின் சாராம்சம் தெய்வீகமாக இருப்பதால் அதிலிருந்து வரக்கூடிய பாலும் சுத்தமானதாக இருக்கின்றது.

சுத்தமான பசும்பால் தினமும் குடித்து வருபவர்களுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்து இருக்கும். இப்போது வரும் பாக்கெட் பாலை தவிர்த்து தொடர்ந்து பசும்பால் குடித்து வாருங்கள், நீங்களே மாற்றத்தை காண்பீர்கள். 

ஒரு மனிதன் தாய்ப்பால் பருகுவதை விட, அதிகமாக பசும்பால் பருகுகின்றான். எனவே கோமாதாவிற்கு உரிய மரியாதை செலுத்தும் பொழுது, பூஜைகள் செய்யும் பொழுது நமக்கு என்றென்றும் வறுமை இல்லாத சுபிட்சமான வாழ்க்கை அமையும்.

இதனால் வெள்ளிக்கிழமையில் நீங்கள் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது கோ பூஜை செய்து விடுங்கள். கோ பூஜை செய்வதற்கு கோமாதா படம் அல்லது கோமாதா சிலை கன்றுடன் கூடியதாக வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், பூ ஆகியவற்றை வைத்து கோமாதாவிற்கு முதல் மரியாதை செலுத்துங்கள். பின்னர் சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

கோ-வில் இருந்து கிடைக்கக்கூடிய பால், தயிர், நெய், வெண்ணெய் ஆகியவற்றில் உங்களிடம் எது இருக்கிறதோ, அதை நைவேத்தியமாக படையுங்கள் அல்லது அதனால் செய்யப்பட்ட பிரசாத பொருளை தயார் செய்து படைப்பது உசிதமானது. 

பால் பாயாசம் செய்வது, தயிர் சாதம் செய்வது போன்றவற்றை எளிதாக செய்து படைக்கலாம். கோமாதா உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு கடவுளர் இருக்கின்றனர். எனவே கோமதவிற்கு எல்லா இடங்களிலும் மஞ்சள், குங்கும பொட்டு வையுங்கள்.

அருகம் புல், அகத்தி கீரை போன்றவற்றை பூஜையில் வைத்து கொள்ளுங்கள். அப்போது தான் பசு மாட்டிற்கு இவற்றை தானம் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும். பூஜை முடிந்ததும் பசுவிற்கு தானம் செய்ய வேண்டும் என்பது முதன்மையானது! சாதாரணமாக நீங்கள் எல்லா பூஜைகளையும் முடித்த பின்பு இதை செய்யலாம். 

2 அகல் விளக்குகளில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கோமாதாவிற்கு தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் தூபம் காண்பித்து, ஹாரத்தி எடுக்க வேண்டும்.

அதன் பின்பு நீங்கள் பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் அருகம்புல் தானம் செய்து விட்டு வர வேண்டும். இது போல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் செய்ய, கோமாதாவின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். இதனால் எந்த விதமான தடைகளும் வாழ்க்கையில் எளிதாக சமாளிப்பீர்கள். 

எவ்வளவு துரதிர்ஷ்டங்கள் உங்களை துரத்தினாலும் அது அதிர்ஷ்டமாக மாற்றி தரக் கூடிய சக்தி இந்த கோ பூஜைக்கு உண்டு. எனவே அன்றாட பூஜையின் பொழுது கோ பூஜையும் சேர்த்து செய்வது நல்லது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top