சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் பற்றிய பதிவுகள் :

சரஸ்வதிக்கே, குருவாக திகழ்பவர், ஹயக்ரீவர். ஹயக்ரீவரை ஞானத்தின் அதிபதியாக புராணங்கள் சொல்கின்றன. செல்வம் என்றாலே அது அழியும் ஒன்றுதான். அழியாத செல்வமாக இந்த உலகத்தில் இருப்பது கல்வி மட்டுமே.

ஒருவரிடம் இருந்து தட்டிப்பறிக்க முடியாத விஷயமாகவும் கல்விதான் இருக்கிறது. அந்த கல்வியின் அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. அந்த சரஸ்வதிக்கே, குருவாக திகழ்பவர், ஹயக்ரீவர். இவரை ஞானத்தின் அதிபதியாக புராணங்கள் சொல்கின்றன. 

பிரம்மதேவர் படைப்புத் தொழிலின் அதிபதி. அவர் நான்கு வேதங்களின் துணை கொண்டு அந்தப் பணியை செய்து வந்தார். அந்த நான்கு வேதங்களையும், குதிரை வடிவில் வந்த மது, கைடபர் என்ற அசுரர்கள் திருடிச் சென்றனர். இதனால் பிரம்மனின் படைப்பு தொழில் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. 

இதையடுத்து பிரம்மதேவர், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்க நினைத்த மகாவிஷ்ணு தானும், குதிரை முகம் கொண்டவராக அவதாரம் பூண்டார். குதிரை முகம், மனித உடல், இரு கண்களாக சூரியன்-சந்திரன், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதியை பெற்றிருந்தார். அவரது உடல் முழுவதும் சூரியனை விடவும் பன்மடங்கு ஒளி பொருந்தியதாக பிரகாசித்தது.

அசுரர்களுடன் போரிட்டு அவர்களிடம் இருந்து வேதங்களை மீட்டு வந்தார், ஹயக்ரீவர். ஆனால் போரின் உக்கிரம் அவரது உடலை விட்டு தணியாமல் இருந்தது. இதையடுத்து தேவர்கள் அனைவரும், லட்சுமி தேவியை ஹயக்ரீவரின் மடியில் அமரச் செய்தனர். இதையடுத்து கோபம் தணிந்த அவர் 'லட்சுமி ஹயக்ரீவர்' என்று அழைக்கப்பட்டார். 

அசுரர்களின் கைபட்டதால், தங்களின் பெருமை குன்றியதாக வேதங்கள் கருதின. எனவே தங்களை புனிதமாக்கும்படி அவை, ஹயக்ரீவரிடம் வேண்டின. இதையடுத்து ஹயக்ரீவர், நான்கு வேதங்களையும் உச்சி முகர்ந்தார். இதனால் அவை புனிதமாக மாறின. வேதங்களையே மீட்டு வந்தவர் என்பதால் ஹயக்ரீவர், ஞானத்திற்கும், கல்விக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வமும் சேரும் என்பதாலேயே, ஹயக்ரீவர் தன்னுடைய மடி மீது லட்சுமி தேவியை அமர்த்தியிருப்பதாகவும் காரண காரியம் சொல்லப்படுகிறது. 

சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவான ஹயக்ரீவரையும் வணங்கி வந்தால், படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியாகும் என்பது ஐதீகம். பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏலக்காய் மாலை அணிவித்து, நோட்டு, பேனாவை பூஜையில் வைத்து வணங்க வேண்டும். 

தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தேனை படிக்கும் பிள்ளைகளின் நாக்கில் தடவி, ஹயக்ரீவரின் மந்திரத்தை உச்சரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.

மந்திரம் :
 
ஞானானந்தமயம் தேவம் நிர்மல 
ஸ்படிகாக்கிருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம் 
ஹயக்ரீவ முபாஸ்மஹே

பொருள்:- 

ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top