ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக ஒருவரது குல தெய்வமே குறிப்பிடப்படுகிறது.
காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுவது ஐதீகம். தனது அருளை குலதெய்வம் அளிப்பதுடன், மற்ற தெய்வ வழிபாடுகளுக்கான பலன்களையும் அளிப்பது ஒருவரது குல தெய்வம்தான் என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும்.
அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை என்றும் சொல்லப்படுகின்றன. குல தெய்வங்கள் இல்லாத குடும்பத்தினர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிலும் நிவர்த்தி செய்ய இயலாது என்ற ஆன்மிக சூட்சுமத்தை சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன. அவை, முன்னோர் செய்த பாவ, புண்ணியங்களால் வரும் நன்மை, தீமைகள் மற்றும் அவரவர் வாழ்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவையாகும்.
பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர்.
அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.