திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலையார் தீபம் மற்றும் விளக்கேற்றும் முறை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருக்கார்த்திகை தீபம் பற்றிய பதிவுகள் :

12 மாதங்களில் பல சிறப்புக்களைக் கொண்ட மாதம், கார்த்திகை மாதம். இந்த மாதத்தை தீபங்களின் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவனை வழிபடக்கூடிய பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடும் முறையை வலியுறுத்தும் மாதம் இந்த கார்த்திகை மாதம். 

இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு உணர்த்தும் மாதம் என்பதால் தான் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களிலும் வீட்டின் வாசலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்றனர். 

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருநாள் டிசம்பர் 06ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முக்தி தலங்களில் முதன்மையானதாகவும், பஞ்ச பூதங்களில் சிவபெருமான் அக்னி சொரூபமாக காட்சி தரும் தலமான திருவண்ணாமலையின் மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு, மக்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர்.

அண்ணாமலையார் தீபம்:

கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலையின் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு அண்ணாமலையார் தீபம் என்று பெயர். இந்த தீபம் அந்த பகுதியை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் மிக பிரமாண்டமாகப் பெரியளவில் தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்காக மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் துணியால் திரி செய்து அதில், கற்பூர தூள் வைத்து சுருட்டப்படும். பின்னர் அந்த திரியை, கொப்பரையில் வைத்து, நெய் வார்த்து, சுடர் எரிப்பார்கள். அது தூரத்திலிருந்து பார்க்க மலையில் தீபம் ஏற்றி வைத்தது போல சிறியதாக தெரியும். கிட்டத்தட்ட அந்த மலையிலிருந்து 60 கி.மீ தூரம் வரை இந்த சுடர், தீபம் போன்று தெரியும்.

கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கு வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க முடியாதவர்கள் முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.

விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கை தரையில் வைக்கக்கூடாது. இதனால் எத்தனை தீபங்கள் ஏற்றுகிறோமோ அதற்கு ஏற்றது போல் வாழை இலை, ஆலம் இலை, அரச இலை ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தீபத்தில் மூன்று தேவியர்களின் சங்கமம்:

தீபச் சுடரானது மஹாலட்சுமியாகவும், அதில் தோன்றும் ஒளி சரஸ்வதியாகவும். வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது.

மனிதனையும், இறைவனையும் இணைக்கக்கூடியதாகத் திருவிளக்குகள் விளங்குகின்றன. அதாவது மனித ஆத்மாவுக்கும், இறைவனுக்கும் இடையேயான உறவை உணர்த்தக்கூடியதாக இருக்கின்றது.

ஒரு தீபச் சுடர் எரியும் போது அந்த விளக்கில் ஊற்றப்பட்டுள்ள எண்ணெயை மெல்ல மெல்ல அந்த திரி உட்கிரகித்து, தீப சுடர் எரிகிறது. தீபச் சுடர் அகத் தோற்றமாகவும், அதன் செயல்பாடு புறத்தோற்றமான எண்ணெய், திரி, விளக்கு போன்றவற்றால் செயல்படுகிறது.

இப்படி திருவிளக்கானது அதில் இருக்கும் மறை பொருள் மூலம் நம் ஆன்மாவையும், இறைவனையும் இணைக்கிறது.

கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். 

குத்துவிளக்கு ஏற்றும் போது ஒரு முகம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 

2 முகம் ஏற்றினால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். 

3 முகம் ஏற்றினால் குழந்தைப்பேறு உண்டாகும். 

4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். 

5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த 27 என்ற எண், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. 27 வைக்க முடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் ஏற்ற முடியாவிட்டாலும் நிலை வாசல் மற்றும் பூஜை அறையில் கண்டிப்பாக இரண்டு விளக்குகளாவது ஏற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top