திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. ரமணர் தவமிருந்த தலமும் இதுவாகும்.
தல வரலாறு :
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார்.
பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார்.
திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மஹா சிவராத்திரி நாளாகும்.
கட்டிடக்கலை :
பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது இந்தக் கோவில். கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான்கு கோபுரங்களும், கோவிலின் உள்ளே ஐந்து கோபுரங்களும் உள்ளன.
கோவிலின் பிரதான கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது. கோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்களையும் காணலாம்.
ஆறாம் பிரகாரம்:
கோவிலின் உள்ளே நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.
ஐந்தாம் பிரகாரம்:
கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம்.
நான்காம் பிரகாரம்:
கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.
மூன்றாம் பிரகாரம்:
கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம்.
இரண்டாம் பிரகாரம்:
அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது.
முதல் பிரகாரம்:
கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது.
கிரிவலம் :
இங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சிதருகிறது. மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது இந்த மலை.
இப்படி சிறப்பு வாய்ந்த மலையை சுற்றி வருவதால் நிறைய பயன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பெளர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள்மீது பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் ஓளிக்கதிர்கள் நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும். எனவே பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு. 14 கி.மீ நீளமுடைய கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் எட்டுத் திசைகளிலும் உள்ளன.
மாணிக்கவாசகரை சிறப்பிக்கும் வகையில் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில் ஒரு கோவிலையும் காணலாம். இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.
சிறப்புகள் :
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது. அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்த இடம் திருவண்ணாமலை. அவர் தற்கொலை செய்ய முயன்றபோது முருகனே நேரில் வந்து காட்சியளித்து அவரை திருப்புகழ் பாடச்சொன்ன தலம் இந்த திருவண்ணாமலை.
மேலும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் போன்றோரும் இடைக்காட்டு சித்தர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம். அப்பர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். மாணிக்கவாசகர் இங்கு இருந்து திருவெம்பாவையையும், திருஅம்மானையையும் இயற்றினார் என்று சொல்வர்.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்தல விருட்சமான மகிழ மரத்தின் கீழ் இருந்து பார்த்தால் கோவிலின் அனைத்து கோபுரங்களையும் காணலாம்.
விழாக்கள் :
அனைத்து கோவில்களைப் போல் தினமும் ஆறு கால பூஜைகள் இங்கும் நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பிரமோத்சவம், ஆடி பூரம், நவராத்திரி, தை மாதம் உத்திராயன புன்னிய கால பிரமோத்சவம், திருவூடல் திருவிழா, மாசி மாதம் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
சிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் பார்வதிக்கும் ஜோதியாக காட்சியளித்ததை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் பத்து நாட்கள் கார்த்திகை தீப உற்சவமும் நடைபெறும்.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
அமைவிடம் :
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது.
அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.