ஆடி மாதத்தின் முதல் நாளை ஆடிப்பிறப்பு என்கிறோம். ஆடி மாதம் துவங்கியது முதல், முடியும் வரையிலான 32 நாட்களும் சிறப்பு வாய்ந்தது தான். இந்த மாதத்தில் எந்த நாளில் அம்மனை வழிபட்டாலும் அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கை கூடும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் பலப்படும்.
ஆடி தபசு நாள் அம்பாள் தவம் இருந்து ஈசனை அடைந்த நாள். ஹரியும், விஷ்ணுவும் ஒன்றே என உலகிற்கு உணர்த்திய நாளும் இது தான். ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி சாற்றினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த நாளில் அம்மனுக்கே வளைகாப்பு நடத்தும் வழக்கமும் உள்ளது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.
ஆடி மாத சிறப்புகள் :
ஒரு வருடத்தில் உள்ள மாதங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற மாதம் ஆடி மாதம் ஆகும். கடும் கோடை வெயிலால் வாடி போயிருக்கும் மக்களுக்கு இதமான காற்று, மழை என தரக் கூடிய மாதமாகும். ஆடி மாதம், தட்சணாயன காலத்தின் ஆரம்பமாகவும் அமைகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.
தட்சணாயன காலத்தில் சூரியன் தெற்கு திசையில் தனது பயணத்தை துவக்குவார். இந்த காலத்தில் மக்கள் புண்ணிய நதிகளில் புனித நீராடுவது மிகவும் விசேஷமாகும். ஆடி மாதத்தில் தான் கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்களுக்கு விழா எடுத்து கொண்டாடுவார்கள். இது நோய் அதிகம் பரவும் மாதம் என்பதால் கூழ் ஊற்றியும், மிக கட்டுப்பாடுகளுடன் விரதம் இருந்தும் தங்களை காத்துக் கொள்கின்றனர்.
ஆடி மாத பிறப்பு :
ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு திதி, நட்சத்திரம் தான் சிறப்பாக இருக்கும். ஆனால் திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி பிறப்பு, ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி தபசு, ஆடி பூரம் என ஆடி மாதம் முழுவதும் திருவிழா, விரதம் என பக்தி நிரம்பி வழியும் மாதமாகும்.
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிக சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாள், சிவன், விஷ்ணு என எந்த தெய்வத்திற்கு விரதம் இருந்து வழிபட்டாலும், பூஜை செய்தாலும், எந்த பொருளை தானம் செய்தாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும்.
ஆடி பிறப்பு 2023 :
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் இந்த ஆண்டு ஜூலை 17 ம் தேதி திங்கட்கிழமை பிறக்கிறது. ஜூலை 17 ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 17 ம் தேதி வரை ஆடி மாதம் உள்ளது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் தனிச்சிறப்பாக இரண்டு அமாவாசைகள் வருகின்றன. ஆடி முதல் நாளே ஆடி அமாவாசை திதி வருகிறது. இரண்டு அமாவாசை, இரண்டு பிரதோஷம், இரண்டு ஏகாதசி, இரண்டு சதுர்த்தி, இரண்டு சஷ்டி கொண்ட மாதமாக அமைகிறது.
ஆடி முதல் நாள் பூஜை :
ஆடி முதல் நாளன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, கோலமிட வேண்டும். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டின் நிலை வாசலில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்ட வேண்டும். அம்மனை வீட்டிற்கு வரவேற்கும் விதமான சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வஸ்திரம் புது வஸ்திரம் வாங்கி ஒரு தட்டில் வைத்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம், தாலி சரடு, வளையல் போன்ற மங்கள பொருட்களை வைத்து, ஏதாவது நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
அம்மனை வழிபடும் முறை :
செவ்வரளி அல்லது மணம் வீசும் பூக்களை அம்மனுக்கு சூட்ட வேண்டும். ஒரு வெண்கல செம்பில் தண்ணீர் நிரப்பி, ஒரு சிட்டிகை மஞ்சள், குங்குமம் சேர்த்து, பூஜை அறையில் வைத்து, அம்மனை மனதார நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். லலிதா சகஸ்ரநாமம், அம்மனுக்குரிய துதி, மந்திரங்கள் ஏதாவது தெரிந்தால் சொல்லி வழிபடலாம்.