முளைப்பாரித் திருவிழா

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முளைப்பாரித் திருவிழா பற்றிய பதிவுகள் :

பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். 

சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்.

பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்.

முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை. 

மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது.

முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top