ஆடி மாதத்தின் முக்கிய நாட்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாதத்தின் முக்கிய நாட்கள் பற்றிய பதிவுகள் :

தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு. தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. ஆடி மாதத்தை "சக்தி மாதம்" என்பர். ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். இந்த மாதத்தில் அம்மனை வழிபட்டால், அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

ஆடி மாதத்தில் ஆலய வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் வழிப்பட்டால் மிகுந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, அம்மன் கோவிலில் ஆடி மாத கொண்டாட்டம் தனிச்சிறப்பாக இருக்கும். 

அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது. குடும்பத்துக்கு அச்சாணியாக திகழும் பெண்கள் ஆடி மாத வழிபாடுகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களது குடும்பம் மேம்படும் என்பது ஐதீகமாகும்.

ஆடி வெள்ளி :

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும். செல்வ வளம் பெருகும். திருமண பாக்கியம் கைகூடி வரும். புதுமண தம்பதியருக்கும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக, ஆடியின் கடைசி வெள்ளிக்கிழமையில் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் இந்நாளில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோயில்களில் கூழ் ஊற்றுவர்.

ஆடி செவ்வாய் :

ஆடி செவ்வாயில் முருகனையும், அம்பாளையும் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டினால் வீட்டில் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும். ஆடி செவ்வாய்க்கிழமையில் கன்னிப் பெண்கள் ஒளவையார் நோன்பிருந்தால் அவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி ஞாயிறு :

ஆடி ஞாயிறு அன்று கன்னி தெய்வத்தை வழிபட்டால், குடும்பம் சுபிட்சம் அடைந்து செல்வ செழிப்பு உண்டாகும். திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும். உங்கள் குலம் வாழையடி வாழையாக தழைத்தோங்கும்.

ஆடி அமாவாசை : (ஜூலை 17, ஆகஸ்ட் 16)

ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.

ஆடிப்பூரம் : (ஜூலை 22) 

ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பொதுவாக பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்கு தனி சன்னதி இருக்கும். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவாள்.

ஆடிப்பெருக்கு : (ஆகஸ்ட் 03)

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியை பெண்ணாக வணங்கும் நாள்! நுரை பொங்க இரு கரைகளையும் தொட்டு, பொங்கி பெருகி ஓடும் காவேரியை மக்கள், "வாழி காவேரி" என்று வாழ்த்தி பூக்களால் அர்ச்சித்து வணங்குவர். குடும்பத்துடன் நீராடி மகிழ்வார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top