ஸ்ரீ ஸ்ரீ ஜெயதீர்த்தர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ ஸ்ரீ ஜெயதீர்த்தர் பற்றிய பதிவுகள் :

பாரத தேசம் மிக பெரும் புண்ணிய தேசமாக விளங்குவதற்கு அந்தந்த காலத்தில் அவதாரம் புரிந்த மஹான்களே காரணம். அப்படி மத்வ மதமான த்வைத்த சித்தாந்தத்தில் மஹாபாரத அர்ஜுனனின் கலியுக அவதாரமாக பிறந்தவர் ஸ்ரீ ஜெயதீர்த்தர். 

மத்வ சம்பிரதாயத்தில் முதன் முதலில் ஜீவனோடு பிருந்தாவன பிரவேசம் செய்த மஹான். இவர்க்கு பிறகுதான் ஸ்ரீ வாதிராஜ தீர்த்தரும், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரும் ஜீவ பிருந்தாவன பிரவேசம் செய்தனர். 

ஜீவனோடு பிருந்தாவன பிரவேசம் செய்பவர்களுக்கு எப்பொழுதும் மற்ற யதிகளை விட அபார தேஜஸும், சக்தியும் மற்றும் கீர்த்தியும் மிக மிக அதிகம்.

அவதார ரகசியம்

மஹாபாரத யுத்தம் முடிந்த பிறகு பாண்டவர்கள் தங்களுக்குள் போரின் வெற்றி குறித்தும், யுக்திகளை கையாண்டதை குறித்தும், தங்களின் பராக்கிரமத்தை குறித்தும் விவாதித்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அர்ஜுனன் தன்னுடைய பராக்கிரமத்தை குறித்து இறுமாந்து இருந்தான். 

அப்போது அர்ஜுனன் பீமனிடம் செருக்குடன் “தான் இல்லையேல் இந்த போரில் நாம் தோற்றுப்போயிருப்போம்” என்று கூறினான். உடனே கோபத்துடன் பேசிய பீமனோ “ஏன் விலங்கைப்போல இவ்வளவு கர்வத்துடன் பேசுகிறாய், கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரஹத்தையும் பரமசிவன் அருளிய பாசுபதாஸ்திரத்தையும் மற்றும் தேர்க்கொடியில் இருந்த முக்ய ப்ராணனான ஹனுமந்தனையும் மறந்துவிட்டாயா?”, என்று வினவ, தன் தவற்றை உணர்ந்தான் அர்ஜுனன். 

நல்லவர்களின் வாக்கு மெய்யாகும் என்பதால், அர்ஜுனன் தன் அடுத்த அவதாரமாக கலியுகத்தில் மத்வரின் ”ஸர்வ மூல க்ரந்தங்களை” சுமக்கும் எருதாக பிறந்தார். ஸ்ரீ மத்வரின் அற்புத கிரந்தங்களுக்கு விரிவுரைகள் எழுதி ஞானயக்ஞம் செய்த தன்னிகரற்ற மகான். 

ஸ்ரீமத்வர் அருளிய நூல்களுக்கு டீகா எழுதியதால் அவர் 'டீகாசார்யார்’ எனப்படுகிறார். தன்னுடைய முன் அவதாரமான எருதாக மத்வரின் ஸர்வ மூல க்ரந்தங்களை சுமந்து, அவரது வாயாலேயே கேட்டு, பின் அடுத்த அவதாரத்தில் ஸ்ரீ ஜெய தீர்த்தராக மத்வரின் ஸர்வ மூல க்ரந்தங்களை விளக்கவுரையுடன் எழுதி டீக்காராயர் என்று புகழ் பெற்றார். சமஸ்கிருதத்தில்” டீக்கா” என்றால் விளக்கவுரை என்று பொருள்.

முன் அவதாரங்கள்

தேவர் தலைவனான இந்திரன் த்ரேதாயுகத்தில் வாலியாகவும், த்வாபரயுகத்தில் அர்ஜுனனாகவும், கலியுகத்தில் ஸ்ரீ ஜெயதீர்த்தராகவும் அவதாரம் புரிந்தார்.

அவதாரம்

மகாராஷ்டிரத்தில், பந்தர்புராவில் இருந்து பன்னிரண்டு மைல் (தற்போது விட்டலன் இருக்கும் விஷேச தலமான பண்டரிபுரம்) உள்ள மங்கள்வேதே மாவட்டத்தில் பிராமண ராஜவான ரகுநாத தேஷ்பண்டே மற்றும் சக்குபாய் தேஷ்பண்டே என்ற தம்பதிக்கு மகவாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் தோண்டுபந்த ரகுநாதா.

மன்னர் குடும்பத்தில் பிறந்ததால் சொத்து, புகழ், ஆடம்பர வாழ்க்கை என்று ராஜபோக வாழ்க்கையில் திளைத்தான் தோண்டுராயா. தங்கத்தாம்பாளத்தில் பிறந்து வளர்ந்த அவனுக்கு துன்பம், வறுமை என்ற வார்த்தைகளுக்கு பொருள் தெரியாமல் இருந்தது. அனைத்திலும் ராஜ உபசாரம். படிப்பு, குதிரை சவாரி, வாத வல்லமை, சமயோஜித புத்தி என்று அனைத்திலும் முதல் மாணவனாக விளங்கினான்.

அக்‌ஷோபிய தீர்த்தருக்கு அருளிய மத்வர்
மத்வரின் நேரடி சிஷ்யரான ஸ்ரீ அக்‌ஷோபிய தீர்த்தர் தன் காலத்திற்கு பின் மடத்தை அலங்கரிக்கும் நபரை தேடிக்கொண்டிருந்தார். தன் வயது மூப்பின் காரணமாக தனக்கு பின் யார் மடத்தின் பீடாதிபதி ஆக போகிறார்கள் என்ற கவலை அவரை வாட்டியது. 

கனவில் வந்த அனுமனின் அவதாரமான மத்வர், ”யவன் ஒருவன் தண்ணிர் அருந்தும் போது சாதாரணமாக அருந்தாமல், குதிரையில் இருந்தே அருந்துகிறானோ அவனே உனக்கு சிஷ்யனாவான்” என்று கூறி மறைந்தார். 

இதனால் மகிழ்ச்சியடைந்த அக்‌ஷோபிய தீர்த்தர் தன் சிஷ்யனை தேட நதிகள், ஆறுகள் என சஞ்சாரம் மேற்கொண்டார். அப்படி ஒருநாள், ”பீமரதி” என்ற நதியில் அந்த பரமாத்மாவை ஜபித்துக்கொண்டிருந்த அக்‌ஷோபிய தீர்த்தர் தன் குருவான மத்வரின் சொல் உண்மையானது.

அப்போது இருபது வயது பாலகனான தோண்டுராயா, ராஜ பரிவாரங்களுடன் குதிரை சவாரி மேற்கொண்டு வேட்டையாடியும், தன் தந்தையின் ஆட்சி எல்லையை அறிய ஊர்வலம் மேற்கொண்டான். பாலகனின் முகத்தில் லஷ்மி கடாக்ஷம் இயற்கையாகவே குடியிருந்தது. 

அனைவரையும் ஈர்க்கும் தேஜஸும், தன்னை எதிர்போரையும் மன்னித்துவிடும் தன்மையும் சிறிய வயதிலேயே வளர்ந்து இருந்தது. ஊர்வலத்தில் மேற்கொண்ட களைப்பினால் சற்று தண்ணீர் தாகம் எடுக்கவே, அருகில் இருக்கும் நதியை நோக்கி குதிரையை ஏவினான்.

தோண்டுராயாவிற்கு களைப்பைப் போக்க அருகில்” பீமரதி” என்ற நதி கண்ணில் படவே, குதிரையில் இருந்து இறங்காமல் அமர்ந்தபடியே நதியில் தன் வாயால் தண்ணீர் பருகி களைப்பை போக்கினான். இதை நதிகரையில் பார்த்த ஸ்ரீ அக்‌ஷோபிய தீர்த்தர் ஆச்சரியப்பட்டார். 

தன் குரு சொன்ன நபர் இவர் தான் என்று நினைத்து, பொதுவாக அனைவரும் இறங்கி குடிப்பது தானே வழக்கம், இவன் விசித்திரமாக அருந்துகிறானே என்று நினைத்து அவர், “கிம் பசு பூர்வ தேஹே” (போன ஜன்மத்தில் பசுவாக இருந்தாயா?) என்று கேட்டார்.

ஒன்றும் புரியாத தோண்டுராயா விளித்தார். இறைவனின் அருளால் உடனே தன் பூர்வ ஜன்மத்தை நியாபகப்படுத்திக் கொண்டு, தன் பூர்வ ஜன்மத்தில் மத்வரின் “ஸர்வ மூல க்ரந்தங்களை” சுமந்த எருதாக இருந்ததையும், அவருக்கு ஸேவை செய்ததையும் தன் ஞானக்கண்ணால் கண்டார். 

இதை அறிந்து மெய்சிலிர்த்துப்போன தோண்டுராயா, உடனே அக்‌ஷோபிய தீர்த்தரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்த தோண்டுராயா தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். பெரியவர்களிடம் அனுமதி இல்லாமல் உன்னை சிஷ்யனாக்க முடியாது என்று கூறி மறுத்த தீர்த்தர் தோண்டுராயாவை அரண்மனைக்கு அனுப்பினார். அதை மறுத்த தோண்டுராயா தன்னை உடனே சிஷ்யனாக்கும் படி கெஞ்சினான். 

திருமண நிகழ்வு

தனக்கு பின் மன்னர் அவையை அலங்கரிக்கும் தன் மகனுக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைக்க நினைத்தார் மன்னர் ரகுநாத தேஷ்பண்டே. தன்னிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் கொழித்து மிக ஆடம்பரமாக திருமணம் நடத்தினார் மன்னர் ரகுநாதா. 

தோண்டுராயாக்கும் அவரது மனைவியான பீமாபாய்க்கும் முதல் இரவு ஏற்பாடு செய்தார். ஷேசனின் ஆவேசமான அவர் பீமாபாய் கண்ணுக்கு ஸர்பமாகவே காட்சியளித்தார். ஸர்பமானது பீமாபாயை அருகில் வரவே அனுமதிக்கவில்லை. இதை பயந்து உணர்ந்த பீமாபாய், தன் மாமனாரிடம் கூறவே தன் தவற்றை உணர்ந்தார் மன்னர்.

“ஸ்ரீ ஜெய தீர்த்தர்” என்று நாம கரணம்
நடந்த விஷயத்தை அறிந்த மன்னரான ரகுநாதா தேஷ்பண்டே மிகவும் கோபமுற்றார். உடனே பீமரதி நதிகரையில் சென்ற மன்னர் தன் மகனை அங்கிருந்து தன் ராஜமாளிகைக்கு அழைத்து வந்தார். 

தன் கணக்கு தவறானதை அறிந்த பின்னர் மன்னரே தன் மகனை ஸ்ரீ அக்‌ஷோபிய தீர்த்தரிடம் ஒப்படைத்தார். தன்னை மன்னித்தருளும் படி வணங்கிய மன்னரை ஸ்ரீ அக்‌ஷோபிய தீர்த்தர் ஆசிர்வதித்து அருளினார். தன் சிஷ்யான தோண்டுராயாவிற்கு வேதம், உபநிடதம், க்ரந்தங்கள் கற்றுக்கொடுத்து “ஸ்ரீ ஜெய தீர்த்தர்” என்று நாம கரணம் இட்டார். மத்வ மடத்தின் ஆறாவது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். தன் குருவான ஸ்ரீ அக்‌ஷோபிய தீர்த்தரிடம் “சுகவாணி”யை கற்றுத்தேர்ந்தார்.

“அக்‌ஷோபியதீர்த்த குருநா ஸுகவாக் ஸிஸ்சிஸ்தஸ்யே மே”
ஜெயதீர்த்தர் தன்னுடைய பல க்ரந்தங்களில் தன் குருவை புகழ்ந்தே எழுதியுள்ளார்.

சரஸ்வதியின் அனுக்கிரகம்

தன் குரு பிருந்தாவன பிரவேசத்திற்கு பிறகே, ஜெய தீர்த்தர் க்ரந்தங்களின் விளக்கங்களை எழுத ஆரம்பித்தார். “துர்கா பெட்டா” (துர்கா மலை”) என்ற இடத்தில் த்ருவராஜைப் போல தவம் மேற்கொண்டு பச்சை இலைகள், பஞ்ச கவ்யம் போன்றவற்றை ஆகாரமாக்கி கடுந்தவம் மேற்கொண்டார். 

கடுந்தவம் மேற்கொள்ளுவது எளிதன்று, இறைவனை மட்டுமே நினைத்து, ஆராதித்து, சிந்தை முழுவதும் அவனாக்கி மேற்கொளல் வேண்டும். அவரின் தவத்தால், அந்த சரஸ்வதி தேவியே அவருக்கு அருள் கொடுத்து நாவிற்கு அனுக்கிரகம் செய்தார். அவரின் ஆவேச அவதாரமான சர்ப்பமும் அவருடனே இருந்தது.

யரகோலா குகை

யரகோலா குகையும், ஜெயதீர்த்தரின் வாழ்க்கையும் பிரிக்க முடியாதது. யாதிர் மாவட்டம், சித்தபுரா என்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டரில் இருக்கும் இடமான யரகோலாவில் தான் ஜெய தீர்த்தரின் பல விளக்கவுரைகள் பிறந்தது. ஆழ்ந்த அறிவும், அபரேக்‌ஷித ஞானமும், வார்த்தையில் கம்பீரத்தையும் கொண்டு அவர் எழுதிய விளக்கவுரைகள் இன்றும் மத்வ சித்தாதங்களுக்கு கலங்கரை விளக்கமாக உள்ளது. 

இந்த யரகோலாவில் தான் அவரின் புகழ் உச்சிக்கு கொண்டு சென்ற “ஸ்ரீமந்நியாய ஸுதா” எழுதினார். அவர் வழியில் வந்த தீர்த்தர்களான ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தரின் பிருந்தாவனமும் யரகோலாவிற்கு அருகில் தான் உள்ளது.

“ஸுதாவ பாத்தானியா, வாசுதேவா பாவநயா” என்பதில் ஜெய தீர்த்தர் “ஸ்ரீமந் நியாய ஸுதா” படிப்பதால் வரும் மகிழ்ச்சி என்பது, ஓர் சாம்ராஜ்யத்தை ஆளும் மகிழ்ச்சிக்கு ஒப்பானவை” என்கிறார்.

அபார கீர்த்தி

மொத்தம் மத்வரின் பதினெட்டு க்ரந்தங்களுக்கு விளக்கம் எழுதியுள்ள ஸ்ரீ ஜெய தீர்த்தர் முக்கியமாக” ஸ்ரீமந் நியாய ஸுதா” வில் அனுவியாக்கியானத்தின் விளக்கவுரையும்,” தத்வ பிரகஷிகா” வில் பிரம்மஸுத்திர பாஷ்யத்தின் விளக்கவுரையும்,” பிரமேய தீபிகா” வில் கீதாபாஷ்யத்தின் விளக்கவுரையும்,” நியாய தீபிகா” வில் கீதா தாத்பர்யாவின் விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

சந்திரிகாச்சாரியரான வியாஸராஜரின் முக்கிய நூல்களான “நியாயாம்ருதா”, ”தர்கதாண்டவா” போன்ற நூல்களின் கரு ஜெய தீர்த்தர் எழுதிய ”வதவாலி”யில் இருந்தே எடுக்கப்பட்டது. அதுபோலவே ஜெய தீர்த்தரின்” தத்வ பிரகஷிகா”வின் விளக்கவுரையை எழுதியே வியாஸராஜர் “சந்திரிகாச்சாரியார்” என்று புகழ் பெற்றார். அதேபோல் ஜெய தீர்த்தரின் “நியாய ஸுதா”வின் விளக்கவுரை எழுதியே மந்திராலயா மஹானான ஸ்ரீ ராகவேந்திரர் “பரிமளாச்சாரியார்” என்று புகழ் பெற்றார்.

அறுவத்தி நான்கு கலைகளில் வல்லமை பெற்ற ஸ்ரீ விஜயீந்திரர் “பிரமாண பத்திதி” என்ற நூலை எழுதும் போது, ஸ்ரீ மத்வரும், ஸ்ரீ ஜெயதீர்த்தரும் என்னை அருளட்டும் என்றே குறிப்பிட்டுள்ளார். 

பிருந்தாவன பிரவேசம்

இருபத்தி மூன்று ஆண்டுகள் (1365-1388) மடத்தின் அதிபதி பொறுப்பில் இருந்த ஸ்ரீ ஜெய தீர்த்தர் மத்வ சித்தாந்தத்தில் தவிர்க்க முடியாத தீர்த்தராக உருவெடுத்தார். மத்வ சிந்தாந்தங்களை திக்கு திக்குகளில் கொண்டு சென்று, பாமரர்களுக்கும் புரியும் அளவிற்கு விளக்கவுரைகளை எழுதி மத்வருக்கு கடந்த ஜன்மத்தில் எருதாக ஸேவை செய்தது போல இந்த ஜன்மத்தில் தன் எழுத்து மூலம் ஸேவை செய்துள்ளார் ஸ்ரீ ஜெய தீர்த்தர்.

ஸ்ரீ ஜெய தீர்த்தரின் ம்ருத்திகா பிருந்தாவனம் இந்தியாவில் பதினேழு இடங்களில் உள்ளது. பெங்களுர், ஸ்ரீரங்கம், சென்னை என்று முக்கிய நகரங்களில் உள்ள பிருந்தாவனம், தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான திருநெல்வேலியில் உள்ளதே மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. இந்த பிருந்தாவனமானது 1740ல் அப்போதைய உத்திராதி மட பீடாதிபதியான ஸ்ரீ ஸத்யப்ரியரால் நிர்மானம் செய்யப்பட்டது. 

அப்பேற்பட்ட மகானுபாவர், தனக்கு பின் வித்யாதி ராஜ தீர்த்தருக்கு பட்டம் சூடி, 1388ம் ஆண்டு ஆஷாட கிருஷ்ண பக்‌ஷ பஞ்சமியன்று கர்நாடக மாநிலத்தில், குல்பர்கா மாவட்டத்தில் உள்ள மலகேடா என்ற புண்ணிய ஷேத்திரத்தில் ஜீவனோடு பிருந்தாவனமானார். 

ஸ்ரீ ஜெயதீர்த்தர் பிருந்தாவனம் குல்பர்கா மாவட்டத்தில் மால்கடே என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் குல்பர்கா மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.

ஸ்ரீ ஜெய தீர்த்தரின் மங்களாசரண சுலோகம்

யஸ்ய வாக்காமதேனுர் ந: 
காமிதார்தான் ப்ரயச்சதி
ஸேவே தம் ஜய யோகீந்தரம் 
காம பாணச்சிதம் ஸதா

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top