பிரிந்துள்ள தம்பதியர்கள் ஒற்றுமையாக வாழ அருள்புரியும் இந்த அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ளது.
தல வரலாறு :
தட்சன் தன்னலம் கருதி, சிவனுக்கு அழைப்பு விடுக்காமல் ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார்.
இதனால், சிவன் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார்.
அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்து அம்பாளை மன்னித்தார்.
பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.தல சிறப்பு :இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல்வாரத்தில் லிங்கத்தின் மீது சூரியன் நேரே தனது ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார்.
இத்தலத்து சண்முகர் முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் காட்சி தருவது சிறப்பு. வலது பக்கம் திரும்பிய ஆவுடையாருடன் சதுர்வேத லிங்கங்கள், பஞ்சலிங்கங்கள், ஜேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பிரதான விநாயகர். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மூன்று நிலைகள் உடையது.தல பெருமை :பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். வசிஷ்டமுனிவர் இங்கு வந்து நதியில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார்.
இந்திரன் தனது தலைமை பதவி நீடிக்க இறைவனை வேண்டி யாகம் நடத்தினான். அந்நேரத்தில் கௌதமர், இந்திராணியிடம் ஓர் அழகிய மலரைக்கொடுத்தார். அதன் அழகில் மயங்கிய அவள், யாகத்தில் மனம் செலுத்தாமல், கவனக்குறைவாக இருந்தாள்.
இதனால், இந்திரனின் வேள்வி வெற்றி பெறவில்லை. கோபம்கொண்ட இந்திரன் தன் மனைவியின் கவனத்தை திசை திருப்பி தன்னிடமிருந்து பிரித்த கௌதம முனிவரையும், அவரது மனைவியையும் பிரியும்படி சபித்தான்.
மனைவியைப்பிரிந்த கௌதமர், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார். மாசி மாதத்தில் சுவாமியை சூரியன் பூஜித்த நேரத்தில் இறைவன் அவருக்கு காட்சி தந்து, சாப விமோசனம் தந்தார். பின், முனிவர் தனது மனைவியுடன் சேர்ந்தார்.
பிரார்த்தனை :
சுவாமியை வணங்கிட குடும்ப பிரச்சனைகள், நோய்கள் தீரும், நினைத்த செயல்கள் நடக்கும், சதுர்வேத லிங்கங்களை வணங்கிட கல்வி, கேள்விகளில் சிறக்கலாம்.