துன்பங்களை நீக்கும் விக்னராஜ சங்கடஹர சதுர்த்தி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துன்பங்களை நீக்கும் விக்னராஜ சங்கடஹர சதுர்த்தி பற்றிய பதிவுகள் :

விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதியானது தேய்பிறையில் வரும் போது அதை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். வளர்பிறை சதுர்த்தியை விட, தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தியிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது வழக்கம். 

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து, விநாயகரை மனதார வழிபட்டால் நம்முடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் காணாமல் போய் விடும் என்பது நம்பிக்கை. அதிலும் இந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கு எப்படி தனியான பெயரும், தனிச்சிறப்பும் உள்ளதோ அதே போல் ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கும் தனியான பெயரும், தனிச்சிறப்பும் உண்டு. 

அப்படி புரட்டாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விக்னராஜ சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். இது விநாயகர் சதுர்த்திக்கு அடுத்து வரும் சங்கடஹர சதுர்த்தியாகும். 

இந்த ஆண்டு விக்னராஜ சங்கடஹர சதுர்த்தி செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அதுவும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையுடன் இணைந்து வருவது தனிச்சிறப்பானதாகும்.

விக்னராஜ சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரின் அருளையும் செல்வம், வெற்றி ஆகியவற்றையும் தரக் கூடியதாகும். இது ஞானத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரக் கூடியது என்றும், தீயசக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கக் கூடியது என்றும் சொல்லப்படுகிறது. 

அதனால் இந்த நாளில் விரதம் இருந்து, விநாயகரின் மந்திரங்களை பாராயணம் செய்து, அவருக்கு மோதகம் படைத்து வழிபடுவதால் விநாயகரின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். விக்னராஜ சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து தன்னை வழிபடுபவர்களுக்கு பலத்தையும், அருளையும் தந்து வழிகாட்டுவார் கணபதி. 

அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளையும் அகற்றி, எப்படிப்பட்ட சவால்கள் இருந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை கொடுப்பார். இறுதியாக தன்னுடைய பக்தர்களுக்கு மோட்சத்தையும் விநாயகர் வழங்கிடுவார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top