ஒரு மாதத்தில் வளர்பிறைத் திதிகள் (சுக்ல பட்சத் திதிகள்) மற்றும் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ண பட்ச திதிகள்) என்று அமாவாசை, பௌர்ணமி சேர்த்து மொத்தம் பதினாறு திதிகள் இருக்கின்றன. இந்தப் பதினாறு திதிகளுக்கும் பதினைந்து அதிதேவதைகள் இருக்கின்றன.
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்ர ரூபத்தில் வழிபடும் முறை "ஸ்ரீ வித்யை" எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.
இந்த ஸ்ரீ வித்யாவின் ப்ரதம தேவதையான "பராபட்டாரிகா" என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீ சக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.
ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மஹா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒரு நாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
தெய்வங்களை கோகுலாஷ்டமி, சதுர்த்தி, அஷ்டமி, திரயோதசி, பஞ்சமி ராமநவமி போன்ற திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை என்றும் சொல்லலாம்.
அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களில் இருந்தும் விடுதலையாவோம், இகபர சுகங்களை நிச்சயமாகப் பெறுவோம்.
கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும்.
இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.
"சுபாகம தந்த்ர பஞ்சகம்" என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. "தந்த்ர ராஜ தந்த்ரம்" என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த திதி நித்யா அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை. இந்த திதி நித்யா தேவியர்களே நம் வாழ்விற்கு தேவையான சகல செல்வத்தையும் திதி தேவைதகளான
1. ஸ்ரீகாமேஸ்வரி,
2. பக மாலினீ,
3. நித்யக்லின்னா,
4. பேருண்டா,
5. வஹ்னி வாசினீ,
6. மஹா வஜ்ரேஸ்வரி,
7. சிவதூதி,
8. ஸ்ரீத்வரிதா,
9. குலசுந்தரி,
10. ஸ்ரீநித்யா,
11. நீலபதாகா,
12. விஜயா,
13. சர்வமங்களா,
14. ஜ்வாலாமாலினீ,
15. சித்ரா நித்யா
என 15 திதி தேவியர்களே வழங்கி நிறைவில் மஹா வித்யா ஆன ஆதிசக்தி பராபட்டாரிக்கா ஸ்ரீமத் லலிதா திரிபுர சுந்தரி நமக்கு முக்தி பிரதாயின்யையாக சிவபேற்றை தானே அருகின்றாள்.
வளர்பிறை, தேய் பிறை திதிகள் படிகளாக கொண்ட மாடி சந்நிதியில் ஸ்ரீமத் ஔஷத லலிதா மஹா திரிபுர சுந்தரி விஸ்வரூப மூலிகை திருமேனியாக தன் அன்பு அடியார்க்கு சுபிட்ஷம் ஐஸ்வர்யம், ஆரோக்கியம், பேரானந்தம் அருளி அவளே குழந்தை பாலா திரிபுர சுந்தரியாக, தருணீ திரிபுர சுந்தரியாக திருவுருவம் கொண்டு தனது ஸ்ரீசக்ர பரிவார தேவதைகளோடு எழுந்தருளி அருளாட்சி புரிந்து, நாளும் பல பல அற்புதங்கள் புரிந்து வருகின்றாள்.
தன் பக்தனுக்காக தை அமாவாசையை பெளர்ணமி ஆக்கி சுப்ரமண்யம் என்ற அபிராமி பட்டரை ஆட்கொண்ட திருநாள் இன்று. ஸ்ரீமாதா லலிதை சொரூபிணீ திருக்கடவூர் அபிராமி அன்னையின் அந்தாதியை இன்று பாராயணம் செய்து பராம்பிகையின் தீருவருளை பெறுவோம்.